மிஃராஜ் பற்றி சிறு துளிகள் தொடர் - 2
மிஃராஜ் விளக்கம் தொடர் - 2
பிறகு சித்ரத்துல் முன்(த்)தஹா வின்பால் என்னை கொண்டு சென்றார் ஜிப்ரயீல். அப்பொழுது அதன் இலைகள் யானையின் காதுகள் போன்றிருந்தது. அதன் பழங்கள் பெரிய பானைகளைப் போன்றிருந்தது. அல்லாஹ்வின் கட்டளையின் நிமித்தம் அதைச்சூழ வேண்டியது சூழ்ந்து கொண்ட போது அது மாறிவிட்டது. அதன் அழகைப் பற்றி அல்லாஹ்வின் படைப்புகளில் எவரும் வர்ணித்துச் சொல்ல ஆற்றல் பெற்றிருக்கமாட்டார். என்பால் எதை அறிவிக்க வேண்டுமோ, அல்லாஹ் அதை அறிவித்தான். ஒவ்வொரு இரவிலும், பகலிலும் ஐம்பது வக்து தொழுகைகளை என்மீது அவன் கடமையாக்கினான். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின்பால் நான் இறங்கினேன் "உமது உம்மத்தினர் மீது உமது இரட்சகன் எதை கடமையாக்கினான்." எனக் கேட்டார்கள். (ஒவ்வொரு இரவு பகலுக்கும்) "ஐம்பது வக்து தொழுகைகள்" என்றேன். அதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் "உமது இரட்சகனின்பால் திரும்பச்சென்று குறைக்குமாறு கேட்பீராக! நிச்சயம் உமது உம்மத்தவர் அதற்கு சக்தி பெறமாட்டார்கள். காரணம் நிச்சயமாக நான் இஸ்ரவேலர்களின் மக்களை சோதித்தேன். அதில் நான் தோல்வியடைந்தேன்" எனக் கூறினார்கள். எனது இரட்சகனின்பால் திரும்பி "எனது இரட்சகா! எனது உம்மத்தவர்களுக்காக குறைப்பாயாக! " எனக் கூறினேன். எனக்கு ஐந்தை குறைத்தான். மூஸாவின்பால் திரும்பி" எனக்கு ஐந்தை குறைக்கப்பட்டது" என்றேன். " நிச்சயமாக உமது உம்மத்தவர் அதற்கும் சக்தி பெறமாட்டார்கள்" எனக்கூறி "உமது இரட்சகனின்பால் திரும்பச்சென்று குறைக்குமாறு கேளுங்கள் " என்றார்.
உயர்வான அபிவிருத்திகளை நல்கும் எனது இறைவனுக்கும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மத்தியில் திரும்ப திரும்பச் சென்றேன். இறுதியாக மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் "முஹம்மதே! நிச்சயமாக ஒவ்வொரு பகலிலும் இரவிலும் ஐந்து வக்து தொழுகைகளாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து உண்டு அதுதான் ஐம்பது. எவராவது ஒரு நன்மையை (நன்மையான காரியத்தை) எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். அதை அவர் செய்துவிட்டால் அதற்கு அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படும்.
ஒருவர் ஒரு தீமையை (பின்னர்) அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவர் மீது எதையும் எழுத படமாட்டாது. அவர் அதை (அத்தீமையை) செய்துவிட்டால் ஒரு தீமை மட்டுமே எழுதப்படும்" எனக் கூறினான். அதைப்பெற்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இறங்கினேன். அவர்களிடம் செய்தியை கூறினேன். அதற்கு அவர்," மீண்டும் உங்கள் இரட்சகனிடத்தில் கேளுங்கள்" என்றார்கள்." எனது இரட்சகனிடத்தில் வெட்கப்படும் அளவுக்கு நான் திரும்பிவிட்டேன்" என்பதாக அவரிடம் கூறினேன் என்பதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அனஸ்பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு, ஸஹீஹ் முஸ்லிம்.)
குறிப்பு :- " புராக் " என்னும் சொல் "பர்க்" என்பதிலிருந்து இங்கு எடுக்கப்பட்டதாகும். பர்க் என்றால் மின்னல் என்பது பொருளாகும். இவ்வாகனம் மின்னல் போன்று மிகத் துரிமதாக பாய்ந்து செல்லக்கூடிய நிலையை அல்லாஹ் அதற்கு நல்கியிருந்தான். மக்கள் மத்தியில் படம் பிடித்து வைக்கப் பட்டுள்ளதைப் போன்றல்ல.
இஸ்லாமிய மார்க்கத்தையும், அதன்மீது நிலைத்திருப்பதையும் என்ற கருத்தே ஃபித்ரத் இயற்கை என்பதற்குரியதாகும்.
(ஷரஹ் நவவீ பாகம் - 2 பக்கம் - 212)
பைத்துல் மஃமூர்
ஏழாவது வானத்தில் பூமியில் உள்ள திருக்கஃபாவை போன்ற ஒரு வீடு உள்ளது. அதன் பெயர் பைத்துல் மஃமூர் ஆகும்.
சித்ரத்துல் முன்(த்)தஹா 'சித்ரத்' என்பதற்கு இலந்தை மரம் என்பது பொருளாகும். 'முன்(த்)தஹா' என்பதற்குக் கடைசி எல்லை - முடிவு என்பது பொருளாகும்.
தொடரும்..........
No comments