ஸலவாத் ஓதுங்கள்
திடனாக அல்லாஹ்வும் இன்னும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் (அந்நபியின் மீது) ஸலவாத்துச் சொல்லி இன்னும் ஸலாம் சொல்லும் விதமாக ஸலாமும் சொல்லுங்கள்.; -அல்-குர்ஆன் 33:56.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பாங்கு கூறுபவரின் பாங்கை நீங்கள் கேட்டால் அவர் கூறியது போன்று கூறுங்கள். பின்பு என் மீது 'ஸலவாத்" கூறுங்கள். என்மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான்.
அறிவிப்பவர் :அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: திர்மிதி, முஸ்லிம், அபூதாவூத்
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே நாங்கள் உங்கள் மீது 'ஸலாம்" உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் 'ஸலவாத்" சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் 'அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா செய்யதினா இப்றாஹீம வஅலா ஆலி செய்யதினா இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா செய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா பாரக்த அலா செய்யதினா இப்றாஹீம வஅலா ஆலி செய்யதினா இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்" எனக் கூறும்படி கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் - கஃப் இப்னு உஜ்ரா ரலியல்லாஹு அன்ஹு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் என் மீது கூறப்படும் ஸலாத்தினை பூமியில் (அதற்கென) சுற்றித் திரியும் மலக்குகள் எனக்கு எத்திவைக்கின்றனர்.
ஆதாரம் : திர்மிதி, ஹாகிம், நஸாயீ அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவர்கள் என் மீது அதிகம் ஸலவாத்து கூறியவர்களே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினர்க
அறிவிப்பவர்வர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : திர்மிதி
உங்களின் நாட்களில் மிகவும் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதே நாளில் தான் அவர்களின் உயிரும் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் தான் சூர் (எக்காளம்) ஊதப்படும். அந்நாளில் தான் மக்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். இத்தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத்தைக் கூறுங்கள். எவர் என்மீது ஒரு முறை ஸலவாத்தைக் கூறுகிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே நீங்கள் மரணமாகி மக்கிப் (மண்ணோடு மண்ணாகிப்) போன பின்னர் எவ்வாறு உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிச்சயமாக நபிமார்களின் உடல்களை மண் திண்பதை அல்லாஹ் தடுத்து (ஹரமாக்கியு)ள்ளான் எனக் கூறினார்கள்
அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : அபூதாவூத், நஸயீ
எனது பெயர் எவரிடம் கூறப்படுகின்றதோ அவர் என் மீது 'ஸலவாத்" கூறட்டும். எவர் என் மீது ஒரு முறை 'ஸலவாத்" கூறுகின்றாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள்புரிகின்றான்
என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: திர்மிதி
மற்றொரு அறிவிப்பில் எவரிடம் எனது பெயர் கூறப்பட்டு அவர் என் மீது 'ஸலவாத்" கூறவில்லையோ அவன் நாசமாகட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஃப் இப்னு உஜ்ரா ரலியல்லாஹு அன்ஹு
உங்களில் யாராவது பிராத்தனை புரிந்தால் அவர் முதலில் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு என்மீது 'ஸலவாத்" கூறிய பின்னர் தனது பிராத்தனையை ஆரம்பிக்கட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : புழாலா இப்னு உபைத் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : திர்மிதி, அஹ்மத், முஸன்னஃப்
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் யா ரஸுலுல்லாஹ் உங்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூற விரும்புகிறேன் அப்படியானால் நான் உங்கள் மீது 'ஸலவாத்" கூற வேண்டிய அளவு என்ன? என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீ விரும்பும் அளவுக்கு கூறும் என்றதும் (எனது நேரத்தில்) கால் பகுதியை ஆக்கிக்கொள்ளவா? எனக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதைவிட அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு (நன்மை) நல்லது என்றார்கள். (எனது நேரத்தின்) அரைப்பகுதியை ஸலவாதிற்காக ஒதுக்கட்டுமா? என்றதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதைவிடவும் அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள். அப்படியானால் எனது முழு நேரத்ததையும் உங்கள் மீது '"ஸலவாத்" கூறுவதற்காக ஒதுக்கிக் கொள்கிறேன் என்றேன். அப்படி நீர் செய்தால் உமது சஞ்சலம் (கஷ்டம்) நீங்கி, உமது பாவமும் மன்னிக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்
அறிவிப்பவர் : உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு
இறைவனின் இனிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: 'என்னிடம் வானவர் கோமான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்கள் வருகைதந்து, ஒருவர் தங்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வாரேயாயின் நான் அவரது கரம் பற்றி சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக தாண்டச் செய்வேன். மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் வந்து, அவருக்குத் தங்களின் ஹெளழுல் கௌஸரின் தடாகத்திலிருந்து தண்ணீர் புகட்டுவேன். இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவருக்காக இறைவனின் திருமுன் ஸுஜுது செய்து அவரது பாபங்கள் மன்னிக்கப்படும்வரை எனது தலையை நான் ஸுஜூதிலிருந்து உயர்த்த மாட்டேன். இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவரது ரூஹை நபிமார்களின் ரூஹை கைப்பற்றுவது போன்று எளிதாகக் கைப்பற்றுவேன் என்று கூறினர்.
ஒருநாள் காலை இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம். ஒரு பெண் கண்ணீர் வடித்தபடி வருகிறார்,
தன்னுடைய இளம் வயது மகள் கடந்த சிலவ நாட்களுக்கு முன் இறந்து விட்டாள், நேற்றிரவு என் கனவில் அவள் தலைவிரி கோலமாக எரியும் நெருப்பின் மத்தியில் என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்! என ஓலமிடுவதைக் கண்டேன். இதன் பொருள் என்ன? என்று கேட்க, அதற்கு இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்கள் மகள் நரகத்தில் இருக்கிறாள். அவளுக்காக சதகா செய்யுங்கள் என்று கூறி அனுப்பினார்கள்.
அன்றிரவு ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கனவில் புதுப்பெண் கோலத்தில் ஒரு பெண் வந்து, சலாம் கூறி என்னைத் தெரியவில்லையா? என்று கேட்க, அவர்களும் நீ யார்? என்று வினவுகிறார்கள்.
அதற்கு அந்தப் பெண் நேற்று காலை தங்களிடம் ஒரு பெண் வந்து என்னைப் பற்றி என் நிலையினைப் பற்றி தங்களிடம் கூறியபோது என் பேரில் சதகா அதிகம் செய்யும்படி கூறி அனுப்பினீர்கள் அல்லவா! அவரின் மகள்தான் நா ன்' என்று கூற… அதற்கு இமாம் அவர்கள் நீ எப்படி சொர்க்கத்திற்குள் வந்தாய்? என்று கேட்க…, நேற்று காலை எனது கப்ரின் வழியாகச் சென்ற ஒரு வழிப் போக்கர் செல்லும் வழியில் ஒரே ஒரு ஸலவாத்தை சொல்லி அதன் தவாபை எனக்கு எத்தி வைக்க, அல்லாஹ்விடம் துஆ கேட்டுவிட்டுச் சென்றார். அந்த ஸலவாத்தின் பொருட்டு அல்லாஹ் என்ககு சொர்க்கத்தை வழங்கிவிட்டான் என்று கூறியதாக சரித்திரச் சான்றுகள் கூறும்.
இஸ்லாமிய பெரியார்களில் ஒருவரான செய்யதுனா இமாம் சுலைமானுல் ஜசூலி ரஹ்மதுல்லாஹி அலைஹி (இவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்த குத்பு மற்றும் இவர்கள் ஷாசுலி தரிக்காவை சேர்ந்தவர்கள்)
அவர்கள் ஒரு இடத்துக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்பொழுது அவர்கள் வுழு செய்ய தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று சுற்றும் முற்றும் தேடி பார்த்தார்கள். தூரத்தில் ஒரு கிணறு தென்பட்டது. உடனே அக்கிணற்றின் பக்கத்தில் சென்று பார்த்த போது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வாளியோ, கயிறோ அங்கு இருக்கவில்ல. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றார்கள்.
• அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுமி "பெரியாரே! தாங்கள் யார்?" என்று கேட்டாள். அதற்கு இவர்கள் தன பெயரை கூறி வந்த விபரத்தையும் கூறினார்கள். அதுகேட்ட அந்த சிறுமி "இவ்வளவு பெரிய மகானாக நீங்கள் இருந்தும் உங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வழித் தெரியவில்லையா?" என்று கேட்டு அந்த சிறுமி கிணற்றுக்குள் தன் எச்சிலை துப்பினாள். அவ்வளவுதான் உடனே அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் மள மள என்று பொங்கி வழிந்தது. உடனே இமாம் அவர்கள் சந்தோஷத்துடன் அதில் வுழு செய்து தொழுதும் முடித்தார்கள். பின்பு அந்த சிறுமியிடம் ஆச்சரியத்தோடு, "மகளே! உன்னால் எப்படி இவ்வளவு பெரிய கராமத்தை செய்ய முடிந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுமி, " நான் என் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் மீது தினந்தோறும் இந்த ஸலவாத்தை ஓதி வருகிறேன். அந்த பரக்கத்தினால்தான் இந்த பாக்கியத்தை பெற்றுக்கொண்டேன்." என்று கூறினாள்.
அந்த நிமிடமே ஸலவாத்தின் மகத்துவத்தை பற்றி விளங்கிக்கொண்ட இமாம் ஜசூலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் " தலாயிலுல் கைராத்" என்ற ஸலவாத்து கிதாபை எழுதினார்கள். இந்த கிதாபை எழுதியதன் காரணமாக அவர்களின் கப்ரிலிருந்து கஸ்தூரி மணம் வீசிக்கொண்டு இருப்பதாக ஷைக் சரூக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஸலவாத்து கிதாபை வழக்கமாக ஓதியவர்கள் சிறந்த அவ்லியாக்கள் ஆனார்கள்.
ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஷெய்கு அப்துல் கரீமில் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர், 'இதய வேந்தரும் இனிய தூதருமான தாஜ்தாரே மதீனா, ஸர்க்காரே தோ ஆலாம் ரஹ்மத்துல்லில் ஆலமீன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்த ஓதும் நீங்கள் இயன்றவரை ஒளுவுடன் ஓத வேண்டும். அத்துடன் ஸலவாத்து ஓதுகின்ற நிங்கள் உங்களை தங்கள் நபியின் முன் இருப்பதாகவும், நபிகளார் உங்கள் முன்னால் ஆஜராகி இருக்கின்றனரென்றும் மனதில் திண்ணமாக நம்புவதோடு, உங்களை பார்த்துக் கொண்டுள்ள உங்களின் ரஸூலின் திருமுன் மிகுந்த கண்ணியத்தோடும், மரியதையோடும் அத்தர் போன்ற மணம் பூசியவர்களாக ஓதுங்கள். ஏனெனில் நாதர் நபி அன ஜலீஸுன் மன் தக்கரனீ என்னை நினைப்பவருடன் நான் இருக்கிறேன் என்று கூறுவதெ நீங்கள் ஸலவாத்தை ஓதத் துவங்கியதும் அண்ணல் நபி உங்கள் முன் ஆஜராகி விடுகின்றனர் என்பதற்குரிய சான்றாகும்.
மேலும் சகோதரா! உனக்கு நான் நல்லுபதேசம் செய்கிறேன். நீ எப்போதும் நபிகள் நாதரின் திருவுருவத்தையும், அவர்களின் அற்புதமான குண ஒழுக்கங்களையும் உனது மனதில் நிலைப்படுத்தி வைத்திரு. அவ்வாறாயின் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் உனது ஆன்மா நபிகளாரின் பரிசுத்தமான தாத்தை சமீபித்து அதனுடன் கலக்கத் துவங்கிவிடும். அப்போது இருலோக வேந்தரான இறைவனின் இனிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்முன் தோற்றம் தருவார்கள். நீ அவர்களை காணும் பேறு பெறுவாய். அது மட்டுமல்ல! அண்ணலாருடன் நீ பேசிடவும் செய்வாய்.
ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றனர், ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், உங்களில் யாராவது என்னை கண்ணியப்படுத்தும் பொருட்டு என்மீது ஸலவாத்துச் சொல்வாரேயாயின், அல்லாஹ் அவரது ஸலவாத்தைக் கொண்டு ஒரு வானவரை உருவாக்குகிறான். அந்த மலக்கின் ஒரு இறக்கை கிழக்கு திசையிலும் மற்றோர் இறக்கை மேற்குத் திசையிலும் அகன்று விரிந்திருக்கும். அவரை நோக்கி அல்லாஹ், என் ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதர் மீது ஸலவாத்துச் சொல் எனக் கட்டளையிடுகிறான். அவ்வானவரும் மறுமைநாள் வரை அவர்மீது ஸலவாத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்
இமாம் ஸகாவீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் தமது முஸ்த்ததாபுல் கலாம் என்னும் நூலில் ரஹ்மத்துல்லில் ஆலமீனான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஒரு ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்:
தாஹா நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்நவின்றார்கள். அல்லாஹ் உடைய வானவர் ஒருவர் இருக்கிறார். அவரின் ஒரு இறக்கை கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும் விரிந்துள்ளது. எவரேனும் என்மீது மிகுந்த நேசத்தோடு ஸலவாத்துச் சொன்னால் உடனே அவ்வானவர் தண்ணீரில் மூழ்கி எழுந்து தனது இறக்கையை உதறுகிறார். அந்த இறக்கையிலிருந்து எத்தனை சொட்டுத் தண்ணீர் விழுகிறதோ, ஒவ்வொரு தண்ணீர் துளியிலிருந்தும் ஒரு மலக்கை அல்லாஹ் படைக்கிறான். அம்மலக்குகள் அனைவரும் தனது ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதரின் பாப மன்னிப்புக்காக மறுமை நாள்வரை இறைவனிடம் இறைஞ்சுகின்றனர்
ஷெய்கு அபூ ஸுலைமான் தாரானீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கோ அல்லது மறுக்கப்படுவதற்கோ உரிய சாத்தியங்களுண்டு. ஆனால் இறைவனின் இனிய நேசரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதப்படும் ஸலவாத்து அங்கீகாரத்தைத் தவிர எந்நிலையிலும தள்ளப்படுவதே இல்லை.
ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களின் விலா எலும்பைக் கொண்டு ஹவ்வா அலைஹிஸ்ஸலாமவர்களை உருவாக்கினான். ஆதம் நபியவர்கள் ஹவ்வாவைக் கண்டபோது, ஹவ்வாவின் மீது ஆசை மேலோங்கவே, ஆதம் நபியவர்கள் அல்லாஹ்விடம், இறைவா! ஹவ்வாவை எனக்கு நிகாஹ் செய்து கொடு எனக் கேட்க, ஆதமே!ஹவ்வாக்குரிய மஹ்ரை முதலில் கொடுத்து விடும் என்று சொன்னான்.
அதற்கு ஆதம் நபி ஹவ்வாக்குரிய மஹர் என்ன? எனக் கேட்க, அதற்கிறைவன், ஆதமே! அர்ஷ் தலைவாயிலில் எனது பெயரோடு சேர்த்து எழுதப்பட்டுள்ள எனது ஹபீபான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வீராக. அதுதான் நீர் ஹவ்வாவுக்குச் செலுத்தும் மஹ்ர் என்று கூறிட அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை ஓதி ஹவ்வாவுக்கு மஹ்ராகத் தந்தனர்.
ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர். ஒருமுறை நபிகள் கோமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை நோக்கி, உங்களில் யார் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றி, மார்க்கப் போரிலும் பங்கு பற்றுகின்றாரோ, அவருக்கு நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை வழங்கப்படும் என்று சொல்ல, அங்கிருந்த தோழர்களில் சிலர் நபிகளாரின் இந்த வார்த்தையைக் கேட்டு மனமொடிந்து போனவர்களாக, நமக்கு அதற்குரிய சக்தியும், வசதியும் இல்லையே என்று வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருக்க,….
அத்தோழர்களின் எண்ணத்தை தெரிந்து கொண்ட இறைவனின் ரஹ்மத் பொங்கியெழுந்து, தன் ரஸூலின் மீது வஹியை இறக்கிச் சொன்னான், ஓ! ஹபீபே! உம் மீது யார் ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர் நானூறு ஹஜ்ஜுச் செய்த நன்மையையும் பெறுவார் என்று கூறினான்.
நூல்: ஜத்புல் குலூப்
ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர், கருணை நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் எவரேனும் என்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அந்த ஸலவாத்தைச் சொன்னவரின் மூச்சுக் காற்றிலிருந்து ஒரு மேகத்தைப் படைக்கிறான். பின்னர் அந்த மேகத்தை மழையாக பொழியச் செய்கிறான். அந்த மழை பூமியின் மீது வந்து விழுகின்ற போது மண்ணில் விழுந்த ஒவ்வொரு துளியிலிருந்தும் தங்கத்தை உருவாக்குகிறான். இன்னும் மலைகள் மீது விழுந்த ஒவ்வொரு துளியிலிருந்தும் வெள்ளியை உருவாக்குகிறான். இதுபோன்றே காபிர்கள் மீது விழும் ஒவ்வொரு துளியிலிருந்தும் அதன் பரக்கத்தால் அவர்களுக்கு ஈமானைத் தந்து முஃமின்களாக்குகிறான் என்று கூறுகின்றனர்.
நூல்: முகாஷிபத்துல் குலூப்
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றனர். ஈருலக ரட்சகர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனர், இறைவனின் அடியார் எப்போதுமு என்மீது ஸலவாத்துச் சொல்கிறாரோ, அதனை ஒரு வானவர் இறைவனின் சன்னிதானத்திற்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கிறார். அப்போதிறைவன் எனது ஹபீபின் மீது சொல்லப்பட்ட இந்த காணிக்கையை எனது ரஸூலின் கப்ருக்கு கொண்டு செல். எனது ரஸூல் ஸலவாத்தை சொன்ன அந்த அடியானுக்காக துஆ செய்யட்டும். இன்னும் அவர்களின் கண்களும் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுகிறான்.
–முஸ்னதுல் பிர்தௌஸ்
இன்னும் இருலோக வேந்தர் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனர், என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அவரது நாவினின்றும் வெளிப்பட்ட அந்த ஸலவாத்த கிழக்கிலும், மேற்கிலும் பரவி கடலிலும் கரையிலும் நிறைந்து பிரபஞ்சத்தின் மூலவரான அகில உலகத்தின் அதிபதியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சொல்லப்பட்ட ஸலவாத்து நான் என்று ஒலித்துக் கொண்டே செல்கிறது. இதன் சப்தத்தை கேட்கும் பிரபஞ்சத்தின் வஸ்துக்களனைத்தும் அந்த ஸலவாத்தை சொன்னவர் மீது ஸலவாத்து சொல்கின்றன
அதன்பின் அந்த ஸலவாத்திலிருந்து ஒரு பறவை படைக்கப்படும். அப்பறவைக்கு எழுபதாயிரம் தோள்களிருக்கும். ஒவ்வொரு தொளிலும் எழுபதாயிரம் இறக்கைகள் இருக்கும் ஒவ்வொரு இறக்கைக்கும் எழுபதாயிரம் முகங்களும், ஒவ்வொரு முகத்திலும் எழுபதாயிரம் நாவுகளும், ஒவ்வொரு நாவிலும் எழுபதாயிரம் பாiஷகளைக் கொண்டு இறைவனை தஸ்பீஹ் செய்து கொண்டு இருக்கும். அந்த தஸ்பீஹின் நன்மைகளனைத்தும் அந்த ஸலவாத்தை சொன்னவருக்கு கிடைத்து கொண்டிருக்கும்
மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களின் காலத்தில் பனீ இஸ்ராயீல்களில் ளரு மனிதன் இருந்தான். அவன் பெரும் அநியாயக் காரனாகவும், ஜனங்கள் மீது சதா அழிச்சாட்டியம் புரிபவனாகவும் இருந்தான். ஊர் மக்கள் அவனது தொல்லை தாங்காது அவனை ஊரை விட்டு காட்டுப் பக்கமாக விரட்டியடித்து விட்டனர். காட்டிற்குச் சென்று வாழ்ந்து இறுதியில் அவனை மரணம் சமீபித்து அங்கேயே இறந்தும் போனான்.
அவன் இறந்தபின் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவித்து, மூஸாவே! எனது நேசர்களில் ஒருவர் காட்டில் இறந்து கிடக்கிறார். நீர் ஊர் மக்களை உம்முடன் அழைத்துச் சென்று அவரை நன்முறையில் அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளையிட, மூஸா நபியவர்களும் ஊர் மக்களும் அங்கே சென்று பார்க்க, இறந்து கிடந்த அவர் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டவரே என்பதை அறிந்து, இவனது துன்பம் தாங்க முடியாமல் தானே இவனை விரட்டியடித்தோம். இவன் எப்படி இறைவனின் நேசனாக முடியும்? என்று ஊர் மக்கள் மூஸா நபியவர்களிடம் கேட்க, மூஸா நபி இறைவனிடம் இதுபற்றி விபரம் கேட்கவும், அல்லாஹ், மூஸாவே! இறந்து கிடக்கும் இவர் ஊர்மக்களால் துரத்தியடிக்கப்பட்டவர்தான். இந்த மனிதர் தன் வாழ்வில் தீமையைத் தவிர வேறு எதையும் செய்ததுமில்லை.
இருப்பினும் இவர் தனது மரணத்தருவாயில் என்னை நோக்கி, கருணாகரா! நான் என் வாழ்நாள் முழுவதும் தீங்கைத் தவிர வேறு எதையும் செய்ததில்லைதான். ஆனால் ஒருமுறை உனது ரஸூல் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜனங்களுக்கு நல்லுபதேசம் வழங்கிக் கொண்டிருந்தபோது, அச்சபையில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது மூஸா நபியவர்கள் எனக்குப்பின் ஒரு ரஸூல் இவ்வுலகிற்கு வருகை தருவார். அவர் பொருட்டே இறைவன் அனைத்தையும் படைத்தான். அவரின் புனிதமிகு திருப்பெயர் முஹம்மத் என்பதாகும். அவர்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்லும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தையும் விட்டு தூய்மையடைவார் என்று சொன்னதை கேட்டு, நானும் அந்த உனது ஹபீபின் மீது அப்போதே ஸலவாத்துச் சொன்னேன். இறiவா! அந்த ஸலவாத்தின் பொருட்டு எனது பாவங்களை பொறுத்துக் கொள் என்று என் ஹபீபின் ஸலவாத்தை முன்னிறுத்தி கேட்டதால் அவனின் சகல பாவங்களையும் மன்னித்ததோடு அவனை எனது நேசர்களில்(வலி) ஒருவராக உயர்த்திக் கொண்டேன் என்று அல்லாஹ் கூறினான்.'
நூல்: அல்-கவ்லுல் பதீஃ
ஸலவாத்து என்பது பிரபஞ்சத்துக்கே ஒரு முழு துஆவாகும்! ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் அதில் கூறப்படும் ! அவர்களின் பெயர் அதில் மகிமைப்படுத்தப்படுவதால் ஸலவாத்து வேண்டாம்! வேண்டாம்! என வஹ்ஹாபிகள் தடுக்கிறார்கள். நாங்கள் எத்தனை தடவை ஸலவாத்து ஓதிக்கொண்டு போகிறோமோ அத்தனை தடவை அது நமக்கு உதவி செய்யும்! நாம் முன்னரே ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குக் கூறியிருக்கிறோம். உங்களுக்கு நினைவில் இருக்கிறதோ இல்லையோ! (அதனை மீண்டும் கூறுகிறோம்).
நடந்த நிகழ்ச்சி!
எங்கள் ஊரில் உள்ள ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அவர் பள்ளிக்கு வந்து தொழுது விட்டு வெளியே வந்திருக்கிறார். அவருடன் கூட வந்த போலீஸ்காரர் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு வந்து “நீங்கள் இப்போது வெளியே போக வேண்டாம்! இங்கேயே இருங்கள். நான்கைந்து பேர் உங்களைத் தாக்குவதற்குக் காத்திருப்பது போலத் தெரிகிறது; எனவே வெளியே போகவேண்டாம்! எனத் தெரிவித்தார்! அப்போது இன்ஸ்பெக்டர் இல்லை... இல்லை... அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்! வரும்போது நீ காரை ஓட்டிவந்தாய்! இப்போது நான் ஓட்டிவருகிறேன் என்று கூறி காரில் ஏறிப் போகிறார்கள்.
அப்போது சிலர் அவருக்குப் பின்னாலிருந்து துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு குறிவைத்தார்கள். உடனே அவர் கீழே பாய்ந்து எதிரிகளை சுடத்தெடங்கினார். அவர்களின் மீது குண்டு பட்டிருக்கிறது. அவர்கள் ஓடிவிட்டார்கள். இவருக்கு எந்தக்காயமும் இல்லை. சுற்றிப்பார்த்ததில் குண்டடிபட்டவன் மட்டும் இருந்தானாம். அப்போது அவர் சொன்னாராம். நான் காப்பாற்றப்பட்டதன் ரகசியம் என்ன தெரியுமா? தொழுது முடித்து விட்டு இத்தனை தடவை ஸலவாத் ஓதிவிட்டுத்தான் வெளியேவந்தேன் என்றாராம்.
ஸலவாத்தின் சிறப்பைப்பாருங்கள்! இது எங்கள் கண்முன்னே நடந்தவிஷயம். எங்கள் வீட்டுச்சுவரிலெல்லாம் புல்லட் பட்டிருந்தது. கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருந்தால் எங்களுக்கும் பட்டிருக்கும். எங்கள் மகளார் கிணற்றடியில் இருந்தார். அங்கே ஒரு லெட் இருந்தது. அந்த சுவர் மறைப்பு இல்லை யென்றால் கதவைப்பிய்த்துக் கொண்டு உள்ளே வந்திருக்கும். அவருக்கு இத்துனை பெரிய ஆபத்துவந்தும் சலவாத்தால் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி இருக்கின்றானே! அல்லாஹ் நமக்கு இந்த சலவாத்தை வழங்கியிருப்பதற்கு இதுதான் காரணம். பதினைந்து தடவை சலவாத்து ஓதிவிட்டு வெளியே செல்லுங்கள் அல்லாஹ் உங்களைப்பாதுகாப்பான்! சலவாத்தை மறந்து விடாதீர்கள் அது மிக முக்கியமானது.
அஷ் ஷெய்கு கலீல் அவ்ன் மௌலானா அவர்கள்
மேற்கன்ட சலவாத்தின் சிறப்பை வாசிப்பது மட்டுமல்லாது தினமும் சலவாத்தை ஒதிவருவோமாக.
எல்லா வல்ல நாயன் அல்லாஹுஸ் சுப்ஆனஹுவதாலா நம்மை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெயரில் சலவாத்து சொல்லும் கூட்டத்தாருடன் இம்மையிலும் மறுமையிலும் இருகச் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
🌺MUBASHSHIR NAQSIBANDI🌺
No comments