அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா
அன்னை (f)பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா)
கவி: ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது மன்பஈ
==============================
அண்ணல் நபியின் பொற்குணங்கள்
ஒரு பெண்ணாய் பிறந்து வந்ததுவோ
கதீஜா நாயகியின் கண்ணியம்
இதய கனியாய் வந்து கனிந்ததுவோ
அலியாரின் வீரம் அறிவுக்கு
அவரை அல்லாஹ்வே பரிசாய் படைத்தானோ
ஹசன் ஹுசைனார் வழியாக வலிமார்
அனைவர்க்கும் மூலமாய் அமைத்தானோ
அம்மா அம்மா பாத்திமா எங்கள்
ஆருயிர் அன்னை பாத்திமா
மங்கையர் திலகம் பாத்திமா எங்கள்
மாநபி மகளார் பாத்திமா (அண்ணல்...)
1) சீமாட்டி வயிற்றில் தோன்றினார்
நபி சீராட்டி வளர்த்த தோகையார்
பெருமானார் தோளில் தூங்கினார்
நபி பண்பெல்லாம் தமக்குள் வாங்கினார்
தூதான பின்னே நபிகளார்
படும் துயர் கண்டு கண்ணீர் சிந்தினார்
தாயாரை போல உருகியே
தம் தந்தைக்கு மருந்தாய் மாறினார்
(அம்மா அம்மா...)
2) இரவெல்லாம் தொழுது வணங்கினார்
பல.. பகலெல்லாம் நோன்பு பேணினார்
மார்க்கத்தில் நடக்க விரும்பிடும்
உலக மகளிர்க்கு முன்மாதிரி ஆகினார்
மணப்பெண்ணாய் அணிந்த ஆடையை
மனம் மறுக்காமல் ஏழைக்கு வழங்கினார்
இப்தாரின் உணவை மூன்று நாள்
தாம் உண்ணாமல் கொடுத்து உதவினார்
(அம்மா அம்மா...)
3) திருகையை கையால் சுற்றினார்
தமது திருவாயால் தஸ்பீஹ் ஓதினார்
வறுமையின் பிடியில் வாடினார் ஆனால்
பொறுமையின் பொது சின்னமாகினார்
சுவர்க்கத்தின் நாயகி பாத்திமா
உலக சுகமெல்லாம் அவரை மயக்குமா
தங்கத்தின் தங்கம் பாத்திமா
அவர் தங்கத்தை தாங்கத்தான் வேண்டுமா
(அம்மா அம்மா...)
4) தந்தையோ அகிலத்தின் அருட்கொடை
பெற்ற தாயாரோ முதல் ஈமான் கொண்டவர்
கணவரோ இறைவனின் சிங்கமாம்
இரு பிள்ளைகள் சுவனத்து இளைஞர்கள்
ஒவ்வொரு வீட்டிலும் பாத்திமா
இங்கு உயிரோடு வாழ்கிறார் பாத்திமா
அவர் பெயர் தானே வைத்தோமே பாத்திமா
தீனின் பெண்ணுக்கு இலக்கணம் பாத்திமா
(அம்மா அம்மா...)
No comments