🌹 வெள்ளிக் கிழமை யாசகம்.....🌹
🌹 வெள்ளிக் கிழமை யாசகம்.....🌹
எங்கள் கண்மணியே!
இனிய வெள்ளிக்கிழமை காலை வேளையில்,
உங்களருள் பெருதற்கரிய பாராயணம் பாடும் வானம்பாடிகளாய்
கானமிசைக்கும் போது எங்கள் நாவுகள் தேனிலூறிய பலாச்சுழை போல் தித்திக்கும் உமிழூற்றாய் ஆகிறது!
மறைந்திருந்து பார்க்கும் தங்கள் புகழிசைக்கும் பொழுதே இத்தனை இன்பமென்றால்?
தங்கத்தால் இழைத்து முத்து பவள வைர வைடூரிய மாணிக்க மரகதங்கள் பதித்து,
ஆங்காங்கே முத்துக்கள் கோர்க்கப்பட்ட கற்பனைக்கெட்டா கலையால் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற சிம்மாசனத்தில் தாங்களமர்ந்து,
தங்களைச் சுற்றி உத்தம சஹாபாக்களமர்ந்து,
உம்மஹாத்துல் முஃமினீங்கள் தங்களுக்கு மேற்கூறப்பட்ட உலோகங்களால் உருவாக்கப்பட்ட அழகான சாமரங்கள் வீசிக்கொண்டு தங்கள் பேரழகில் சொக்கி நிற்க, வெண்மதியும் தங்கள் பேரெழிலில் அங்கே வெக்கி நிற்க,
இந்தப் பாமரர்களும் அந்த கவின்மிகும் அவையில் ஒரு ஓரம் சிரம் பணிந்து நின்று உங்கள் புரம் கரம் தூக்கி,
யா ரஸூலே ஹுதா!
எங்கள் ஊனும் அர்ப்பணம்,
உயிரும் அர்ப்பணம்,
உடலும் அர்ப்பணம்,
உள்ளமும் அர்ப்பணம்
உதிரமும் அர்ப்பணம்,
நாடி நரம்பெலும்பு சதையும் சதாவும் அர்ப்பணமென்று
ஆலாபனை பாடி நிற்கனும் நாயகமே!
அது கேட்டு தாங்கள் புன்னகை பூவிதழ் விரித்து பட்டொளி வீசும் முத்துப்பற்கள் தெரித்து,
என் பல கோடி உம்மத்தில் உன்னையும் பொருந்திக் கொண்டேனென்ற பொற் சொற்களுதிர்த்து
பாதார விந்தங்கள் பற்றியழுகச்செய்தால் மட்டுமே இந்தப் பாவிக்கு உயர்வு நாயகமே!
இது எம் தகுதிக்கு மிஞ்சிய ஆசையென்று நன்றாக தெரிந்திடினும், இதயப்பகுதியில் என்றைக்கும் உறுத்திக்கொண்டிருக்கின்ற உந்துதலும் கெஞ்சுதலும் தான் நாயகமே!
இது ஒரு மழலை போலாகி கொஞ்சும் மொழி கொண்டு கெஞ்சும் யாசகம் தான் நாயகமே!
அன்றேல், உங்கள் மேல் பைத்திய நிலையிலிருந்து உளறுகின்ற உள்ளக்கிடக்கையின்
செல்லச் சிணுங்கள் நாயகமே!
அன்றைய மதீன வீதியில் பைத்திய நிலையில் தங்கள் கையைப் பற்றிய பெண்மணி அழைக்கும் திசையெல்லாம் தாங்களும் உடன் சென்று அந்தப் பெண்ணைத் தேற்றினீர்களே!
இதோ!
இன்று எம் நிலையும் அதுதான் தேற்றிட வாருங்கள் திங்களே தெள்ளமுதே!........
✍🏻_எம், சலீமாபானு பிலாலிய்யா......
No comments