நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்
சூஃபி ஒருவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தார்.
ஒரு நாள் இரவு அவர் சூஃபிகளுக்கான மடம் ஒன்றில் தங்கினார்.
தனது கழுதையை லாயத்தில் கட்டினார்.
நண்பர்களுடன் இறைதியானத்தில் ஈடுபட்டனர்.
சூஃபிகளின் இறைத்தியானம் முடிந்தபின், சாப்பாடு வந்தது.
சூஃபிக்கு தன் கழுதையின் நினைவு வந்தது. சேவகனைக் கூப்பிட்டார்.
'லாயத்திற்குச் சென்று வைக்கோலும் பார்லியும் எனது கழுதைக்கு வை ' என்றார்.
'லா ஹவ்ல் (இறைவனைத் தவிர வேறு ஆற்றலில்லை). நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் உண்டு ' என்றான் சேவகன்.
'முதலில் பார்லியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள். கழுதை கொஞ்சம் வயசானது. அதோடு அதன் பற்களும் பலகீனமானவை '
'லா ஹவ்ல், எனக்குத் தெரியும் 'என்றான் சேவகன்.
'சேணத்தை அகற்றிவிட்டு, காயப்பட்ட அதன் முதுகில் நிவாரணி மருந்தை தடவி விடு '
'லா ஹவ்ல், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான விருந்தாளிகளை நான் கவனித்திருக்கிறேன். அனைவருமே எனது சேவையில் திருப்தியுற்றவர்களாகத்தான்திரும்பியுள்ளார்கள் 'என்றான் சேவகன்.
'குடிப்பதற்கு தண்ணீர் கொடு. ஆனால் அது ரொம்ப சூடாகவும் வேண்டாம், ரொம்ப குளிர்ச்சியாகவும் வேண்டாம் '
'லா ஹவ்ல், நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கே வெட்கமாக உள்ளது 'என்றான் சேவகன்.
'பார்லியில் கொஞ்சம் வைக்கோல் கலந்து வை '
'லா ஹவ்ல்,'போதும் ஐயா, வேலை தெரிந்தவனிடம் நீங்கள் வேலையை விளக்க வேண்டியதில்லை 'என்றான் சேவகன்.
பொறுமை இழந்த சேவகன், பார்லியும் வைக்கோலும் எடுத்து வருவதாக சொல்லிச் சென்றான்.
சென்றவன் சென்றவன்தான். சூஃபியின் உத்தரவுகளையும் கழுதையையும் மறந்தான். தன் சகாக்களோடு சேர்ந்து அரட்டையடித்து, கழுதை மீது சூஃபி கொண்ட அக்கறையை கிண்டல் செய்தும் பொழுதைக் கழித்தான்.
பிரயாணத்தால் களைப்புற்றிருந்த சூஃபி, கட்டளைகளைக் கொடுத்துவிட்டு கண்ணுறங்கச் சென்றார்.
தன் கழுதையை ஓநாயொன்று முதுகிலும் தொடையிலும் கடித்துக் குதறுவதாகவும், சாலையிலும் கிணற்றுக்குள்ளும் அது விழுந்துவிடுவதாகவும் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தார் .
கதவுகளை வெளிப்பக்கமாக தாழ் போட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்டார்களே! என்ன செய்வது ? யாரிடம் உதவி கேட்பது ?
இவ்வாறாக சூஃபி சிந்தித்துக் கொண்டிருக்கையில், லாயத்தில் அவர் கழுதை இறைவா, பார்லி வேண்டாம், ஒரு கைப்பிடியளவு வைக்கோலாவது தரக்கூடாதா ? ஓ, குருமார்களே! அந்த மரியாதை தெரியாத, பக்குவமற்ற அயோக்கிய சேவகனின் பொருட்டு என் மீது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்று தனது ஊமை நாவன்மையால் முறையிட்டுக் கொண்டிருந்தது.
விடிந்ததும் வந்தான் வேலைக்காரன். கழுதைக்கு சேணம் பூட்டினான். வழக்கப்படி இரண்டு மூன்று அடிகளும் கொடுத்தான். வலி பொறுக்க முடியாமல் துள்ளிக் குதித்தது கழுதை.
சூஃபி அதன் மீதி ஏறி தன் பிரயாணத்தைத் தொடர முயன்றபோது, பலமுறை அது குப்புற விழுந்து மண்ணைக் கவ்வியது. உடம்பு சரியில்லை என்றெண்ணி, சக பயணிகள் அதை ஒவ்வொரு முறையும் தூக்கிவிட்டார்கள். சிலர் அதன் காதுகளைத் திருகினார்கள். சிலர் அதன் குளம்பில் கல் குத்தியுள்ளதா என்று கவனித்தார்கள்.
'குருவே, என்ன ஆயிற்று உங்கள் கழுதைக்கு ? எனக்கு இறைவன் ஆரோக்கியமான கழுதையைக் கொடுத்துள்ளான் என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்தீர்களே ' என்று கேட்டனர்.
'ராத்திரி பூரா 'லா ஹவ் 'லைத் தின்ற கழுதை இப்படித்தானிருக்கும். இரவில் இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறது ' என்றார் சூஃபி.
ஷைத்தானுடைய வாயிலிருந்து வரும் 'லா ஹவ்ல் ' என்பதை விழுங்கும் எவனும் இந்தக் கழுதையைப் போல குப்புற விழ வேண்டியதுதான்.
நயவஞ்சகர்களுடைய வார்த்தைகளின்மீது எச்சரிக்கையாய் இருங்கள். விரிக்கப்படும் வலையை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த உலகின்மீது பாதுகாப்பாகத்தான் நடக்கிறோம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.
எத்தனையோ ஷைத்தான்கள் 'லா ஹவ்ல் ' என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர். ஒரு கசாப்புக் கடைக்காரனைப் போல தோலை உரிப்பதற்குத்தான் அதெல்லாம்.
உங்களுக்கான உணவை நீங்கள் தேடுங்கள். சிங்கத்தைப் போல.
நயவஞ்சகர்கள்தான் கஸ்தூரியை உடம்பில் போட்டுக்கொள்கிறார்கள். அவர்களுடைய உதடுகள் இறைவனுடைய திருப்பெயரை உச்சரிக்கும். அவர்களுடைய உள்ளங்களில் இருந்து அவநம்பிக்கையின் துர்நாற்றம் அடிக்கும். அவர்களைப் பொறுத்தவரை, இறைப்புகழ்ச்சி என்பது, கழிவு மலை மீது வளரும் ரோஜாக்களையும் லில்லி மலர்களையும் ஒத்தது.
மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி லிஹி அவர்களின் மஸ்னவி ஷரீபில் வரும் சூபியும் கழுதையும் கதையை தழுவி நாகூர் ரூமி எழுதியது ..
By
Proffesser Mujiburahman
No comments