Header Ads

  • Breaking News

    கஜினி முகமது







    கஜினி முகமது

    ******


             தற்போது பெருங்கதையாடலுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய வரலாறு, ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்த கருதுகோள்களாகவே உள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது என்று பரப்பிய கற்பிதமாகும். இதற்காக அவர்கள் முன்னிருத்தும் முதன்மையான வரலாற்று நிகழ்வு கஜினி முகமதுவின் இந்தியப் படை யெடுப்பு. தங்களது கருதுகோள்களை நிறுவ அவர்கள் தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள் மிகவும் கவனமானவை. தனது படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தின் மீது நடத்திய கொள்ளை மற்றும் தாக்குதலை இந்து மதத்தின் மீதான தாக்குதலாகவும், இந்தியாவில் இசுலாமியப் பேரரசு ஏற்படுவதற்கான அஸ்திவாரமாகவும் உருவகப்படுத்தினர்.


    சோமநாதர் ஆலயத்தின் மீதான படையெடுப்பு (முதல் முதலாக!) கி. பி. 1026 இல் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஏராளாமான தங்க- வைர-வெள்ளி நகைகளும், சொத்துகளும் கொள்ளையடிக்கப்பட்டன. விக்கிரகங்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னரான கடந்த 1,000 ஆண்டு களில் இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கண்ணோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் 'ஒரு நிகழ்வு மற்றும் அதன் வெளி ஆகியன குறித்த பல்வேறான மக்களின் நினைவூட்டல்கள் அல்லது மறக்கடித்தல்களைப் புரிந்துகொள்வதிலுள்ள வரலாற்றுக் குழப்பங்களில் அந்நிகழ்வுக்கு அப்பால் வளர்த்தெடுக்கப்படும் வரலாறு எழுதுதலும், வரலாற்றுக் கதையாடல்களும் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெளிக் கொணர்வதே' தமது நோக்கம்.


    ஒரு வரலாற்று நிகழ்வு காலத்துக்குக் காலம் அதன் பொருளும், பரிமாணமும் மாறி வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. இங்கு, சோமநாதர் ஆலயப் படையெடுப்பைப் பொறுத்தவரை ஒரு கோயில் அபுனிதப்படுத்தப்படுவது ஆகும். யதார்த்தமாகவோ அல்லது வேண்டுமென்றேவோ அந்த நிகழ்வின் மீதாக எழுப்பப்பட்ட நினைவுகளை நோக்கிய அணுகுமுறைகள் ஆய்வு செய்யப்பட வேண்டி யுள்ளது. இங்கு அந்தக் குறிப்பிட்ட நிகழ்வின்மீது எக்கேள்வியும் இல்லை. தனிப்பட்ட அந்த நிகழ்வை எக்கேள்விக்கும் உட்படுத்தவில்லை. அந்நிகழ்வின் சமகால மற்றும் பிற்கால வரலாற்றாதாரங்களில் அவை எவ்வாறு பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்பதன் மீது கேள்விகள் உள்ளன. பிற்காலம் என்பது அந்நிகழ் வுக்குப் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீள்வதுதான் வியப்பு. இக்காலங் களினூடாக அந்நிகழ்வின் விளக்கங்கள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதில்தான் அதற்கான அரசியல் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இந்த விளக்கங்கள் எவ்வாறு துவேஷத்தின் விபத்துகளைத் தாங்கியிருந்தன; இசுலாமியருக்கு எதிரான இந்து தேசியத்தைக் கட்டமைக்க அவை எவ்வாறு பயன்பட்டன என்பவை நவீனகால அரசியல் வெளிப்பாடுகள். ஓர் வரலாற்றின் பல குரல்களாகச் சிதறியிருந்த ஆதாரத் தொகுப்புகளை இணைத்து அந்நிகழ்வின் மீது புதிய வழங்க முற்படுகிறேன்.


    சோமநாதர் ஆலயப் படையெடுப்பு குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரத் தொகுப்புகள் உள்ளன. இவை வெவ்வேறு இன, மத, மொழி, பண்பாட்டு ஊற்றுகளில் இருந்து திரள்பவை. நூற்றுக்கணக்கான வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள், ஆதாரங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், பயணக் குறிப்புகள், கதையாடல்கள், கதை கள், கதைப்பாடல்கள், அரசுக் குறிப்புகள், விவாதங்கள் மற்றும் மக்கள் நினைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த ஆதாரத் தொகுப்புகளை ஆறு பிரிவுகளாக பிரிக்க லாம். சில ஆதாரங்கள் மட்டுமே விரிவான தகவல்கள் கொண்டவை. மற்ற பெரும்பான்மையானவை போகிறபோக்கில் அந்நிகழ்வு குறித்துக் குறிப்பிடப்படுபவை                   அல்லது பல்வேறு இணை நிகழ்வுகளுடன் அல்லது மாற்று நிகழ்வுகளுடன் குறிப்பிடப்படுபவை. மொழி, நடை போன்றவற்றில் வெவ்வேறானவை. இவற்றின் நோக்கங்கள், கண்ணோட்டங்களை நாம்தான் பொருத்திப் பார்க்க வேண்டும். இவற்றில் பல தகவல்கள் அண்மைக்காலத்தில் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேயில்லை. வரலாறு எழுதுவதற்கு இத்தகைய மறு விமர்சனங்கள் மிகவும் இன்றியமையாதவை.


    ஆறு விரிவான ஆதாரத் தொகுப்புகளில் முதலாவதாக துருக்கிய- பாரசீக வரலாற்று வர்ணனைகளை எடுத்துக் கொள்வோம். இவற்றில் பெரும்பாலானவை பாரசீக மொழியில் அமைந்த வரலாறுகளும், வர்ணனைகளும், இலக்கியங்களும், காவியங்களும் ஆகும். காஜினாவத் பேரரசின் அரசியல், பண்பாடு குறித்தும், வட இந்திய அரசியல், பண்பாடு குறித்தும் அரபி மொழியில் அமைந்த சில வரலாற்றுக் குறிப்புகளும் இதில் அடங்கும். இரண்டாவது ஆதாரத் தொகுப்பில் சோமநாதர் ஆலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அடங்கியுள்ளன. மூன்றாவதாக சமணர்களின் வரலாறுகள், சமண வரலாற்றுக் குறிப்புகள், ராஜபுத்திரர்களின் அரண்மனைக் காவியங்கள்  அடங்கியவையாகும். நான்காவதாக கஜினி முகமது குறித்து வெகுஜனமக்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் வாய்மொழி மரபுகள். 19-ஆம் நூற்றாண்டின்போது இப்பிரச்சனையில் ஆங்கிலேயர் தலையிட்டதன் விளைவாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் ஐந்தாவது சான்றுகள் ஆகும். ஆறாவதாக இந் நிகழ்வு குறித்த இந்திய (இந்து) தேசியவாதிகளின் மறுகட்டமைப்பு ஆகும்.


    ஆறு ஆதாரத் தொகுப்புகளில் துருக்கிய- பாரசீக வரலாற்றுக் குறிப்புகளே அதிக ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன. அவை முன்வைக்கும் வரலாறே ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது என முன்னுரிமை கோருபவையாக உள்ளன. அதேசமயம் அவர்கள் முன் வைக்கும் வரலாற்றியலுக்கான நோக்கம் குறித்த விரிவான விவாதத்திற்கோ, அவர்களின் ஆதாரங்களைப் பிற தடயங் களோடு பொருத்திப் பார்ப்பதற்கோ முன்வருவதில்லை. இந்த வரலாறுகள் முன்வைக்கும் விளக்கங்களுக்கு உட்பட்டே வாசிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வளவுக்கும் இந்த வரலாற்றுக் குறிப்புகளும், வர்ணனைகளுமே ஒன்றுக் கொன்று முரண்பாடு கொண்டவையாக உள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் தரப் படுவதில்லை. சாதாரண வாசிப்பில் இம்முரண்கள் புறக் கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.


    துருக்கிய - பாரசீக வரலாற்று ஆவணங்கள் பெரும் பாலானவை படையெடுப்பின் சமகாலத்தவை; அல்லது அதைத் தொடர்ந்த சில நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அரசவைக் கவிஞர்களாலும், அரச வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டவை. பொதுவாக தங்கள் பேரரசரின் வீர பராக்கிரமங்களை அதீதமாக புகழ்ந்து போற்றும் வகையிலே இவை இருக்கும். மேலும், 11-ஆம் நூற்றாண்டில் நிலவிய துருக்கி மற்றும் பாரசீகம் இடையேயான நாடுபிடிக்கும் போட்டியையும் இங்கு மனதில் கொண்டு வாசிக்க வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் வலிலியுறுத்துகிறார். இசுலாமியமயமாக்கலில் பாக்தாத் மற்றும் காஜானாவித் இடையே ஏற்பட்ட போட்டியில் ஒருவருக் கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில் தங்கள் பேரரசுதான் இசுலாமியத்தை உலகில் பரப்பியது என்று நிரூபிக்க முயன்றதன் விளைவே இக்கட்டுக் கதைகள். குறிப்பாக, இசுலாமிய உள் முரண்பாடுகளைக் களையெடுப்பதற்காக, இசுலாமியத்துக்கு முந்தைய அப்பிரதேச தெய்வ வழிபாட்டு முறைகள் இசுலாமியத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றுவதற்காக, இசுலாமியத்தின் உள்பிரிவுகளை ஒழிப்பதற்காக, சுல்தானுக்கு இணையாக காஜானாவாத் பேரரசைக் காட்டுவதற்காக இந்த வர்ணனைகளும், கதையாடல்களும் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திருப்பிவிட ஆங்கிலேயர்கள் இதனை சாதகமாகப் பயன் படுத்தினர். இந்தியா இரண்டு தேசங்களை உள்ளடக்கியது என்ற கற்பிதத்தைக் கட்டமைக்கவும் இவை பயன்பட்டன.


    சோமநாத ஆலயப் படையெடுப்பின் சமகாலத்தில் எழுதப்பட்ட வரலாறுகளில், படையெடுப்பின்போது உடைக்கப் பட்ட ஒரு விக்கிரகம் குறித்த கற்பனை கலந்த குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்தின் மதிப்பும் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.  அதன் பின்புலத்தில் உள்ள உளவியலையும் கால வரிசைப் படியான வரலாற்றாதாரங்களை வரிசைப்படுத்தி பார்த்தால் இது நன்கு புலனாகும். இந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்படுவதற்கு கஜினி முகமதுவின் படையெடுப்பே காரணம், அவர்தான் இந்தியாவில் இசுலாமியப் பேரரசை நிறுவினார் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அக் காலத்திய இசுலாமிய வரலாற்றுடன் ஒப்பிட்டால் அக் காலத்தில் இந்தியாவில் இசுலாமியம் ஊடுருவியது என்பதைவிட, அக்காலத்தில் காலிலிப்புக்குச் சவால்விடும் வகையில், இஸ்லாத் மத சம்பிரதாயங்களை நிறுவுவதில் யார் முன்னிலையில் இருந்தனர் என்ற போட்டியே நிலவியது.


    இங்கு, இந்நிகழ்வுக்கு முந்தைய நிலைமைகளைப் பார்ப்பது அவசியம். சோமநாதர் கோயில் அமைந்த பகுதி சோம்நாத் நகர் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ளது. இது முன்னர் பிரபாசபட்டினம் என அழைக்கப்பட்டது. சௌராஷ்டிரா பகுதியின் முக்கிய யாத்திரை தலமாகவும், தீர்த்த தலமாகவும் இருந்தது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலிலிருந்தே வளர்ச்சியடைந்த பகுதியாக குஜராத் இருந்துள்ளது. கடல் வழியாக நடைபெற்ற வணிகம் இதற்கு முக்கிய காரணமாகும். தரை வழியாகவும் வணிகம் சிறப் புற்றிருந்தது. இதனால் பன்முகப்பட்ட மக்களும், கலாச் சாரங்களும் வளர்ந்திருந்தன. அருகிலேயே வேரவல் துறைமுகப்பட்டினமும் இருந்தது. இங்கு மூன்று ஆறுகள் ஓடி கடலிலில் கலக்கின்றன. இப்பகுதியில் நடந்த தொல்லிலியல் ஆய்வுகள் மூலம் இங்கு கி. மு. 3000-க்கு முன்பாகவே சிறிய அளவிலான வேளாண் சமூகங்கள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. குஜராத் சுடுமண் சிறப்புகள் மூலம் வேளாண் பண்பாடு இப்பகுதியில் தொடர்ச்சியாக நீட்சி பெற்றுள்ளதை அறியலாம். கி. மு. 500 காலகட்டத்திலேயே கிரேக்கத்துடன் வணிகமும் நடைபெற்றுள்ளது.


    மகாபாரதம் மற்றும் பல புராணங்களில் சோமநாத் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கிறது. தட்சன் சாபத்தால் தனது செயல் பாட்டை சிவன் இழந்ததால் பூமியில் வறட்சி ஏற்படுகிறது. தொடர்ந்து தேவர்கள் முறையீட்டால் சாபம் திருத்தப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு சிவன் பலம் தொடர்ந்து அதிகரிக்கும்; அடுத்த 14 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பலம் குறைந்துவிடும். இதன் காரணமாகவே அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை, தேய்பிறை, கிரகணங்கள் ஏற்பட்டன. இதனால் மழை பெய்து வறட்சி நீங்கி உலகம் வளம் அடைந்தது என்று புராணக்கதைகள் கூறுகின்றன. லூனார் காலமுறை அடிப்படையிலான பருவ நிலைகளைக் குறிக்கும் வகையில் இக்கதை உள்ளது. மகாபாரதத்திலும் சோமநாத் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு சிவன் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, தீர்த்த தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணன் இங்குதான் முதன்முதலாக அர்ஜுனனைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னர் இது ஒரு வைணவத் தலமாகவும் இருந் திருக்கலாம் எனத் தெரிகிறது.


    முக்கியமாக, சோமநாத் ஒரு தீர்த்த தலமாக இருந்துள்ளது. மூன்று ஆறுகள் சந்திக்கும் திரிவேணி சங்கமமாக உள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தமாடுவதைப் புனிதமாகக் கருதியுள்ளனர். இதில் பேதமற்று மக்கள் சங்கமித்துள்ள னர். மௌரியர்கள் ஆட்சியின்போது இப்பகுதியின் வேளாண்மை மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் ஏராளமாக முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. இப்பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கு மௌரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், இந்திய வரலாற்றின் தொடக்க காலத்திலேயே வேளாண் வளர்ச்சிக்குப் பேரரசுகள் முக்கியத்துவம் அளித்ததை அறிய முடிகிறது. இதே காலகட்டத்தில் ஈரான் மற்றும் மேற்கு பகுதிகளுடனான நெருக்கமான உறவும் இருந்துள்ளது. கிறிஸ்து பிறப்பையொட்டிய நூற்றாண்டுகளில் இப்பகுதியும் முக்கிய பௌத்த தலமாக இருந்துள்ளது. இப்பகுதியின் வர்த்தக வாய்ப்புகள் எப்போதும் போலவே அண்டைப் பகுதிகளை ஈர்த்து வந்துள்ளன. சோமநாத் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் குகைக் கோயில்களும், கல்வெட்டு ஆதாரங்களும் இதைக் காட்டுகின்றான. முக்கிய வர்த்தக மையமாகவும், வேளாண் மண்டலமாகவும் உள்ள தாலும், இப்பகுதிக்கு வரும் யாத்ரீகர்களைப் பராமரிக்க வேண்டியிருந்ததாலும் மௌரியப் பேரரசர்களிடம் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். மௌரியர்கள் காலத்துக்குப் பின்னரும் இப்பகுதி அரசியல், பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாக இருந்துள்ளது.


    ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பௌத்த மதம் மறையத் தொடங்கியது; சைவம், வைணவம், சமணம், சாக்தம் போன்ற மதங்கள் வளரத் தொடங்கின. குப்தர்களுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திராகர்கள் பல மதங் களுக்கும் தாராளமாக உதவியதிலிலிருந்து இங்கு பல மதங் களின் செல்வாக்கு நிலவியதை அறிய முடிகிறது. சூரிய, சந்திர வழிபாடுகளில் மட்டும் ஈடுபட்டவர்களும் இருந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இங்கு பயணம் செய்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், இங்கு புத்த மதம் தேய்ந்து, சைவ, வைஷ்ணவ மதங்கள் செழித்து வருவதை தனது பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்பகுதியில் பல்வேறு சைவ, வைணவத் தளங்களைக் குறிப்பிடும் அவர் பிரபாசாவில் (சோம்நாத்தில்) இந்து கோயில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் பயணம் செய்த ஒரு பயணி, புத்த மதம் மறைந்தபின்னரும்கூட இங்கு ஒரு புத்த கோயில் இருந்துள்ளதாகவும், பின்னர் அக்கோயில் சோமநாதர் ஆலயமாக சைவர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக இப்புத்தகத்திலேயே மேற்கோள் காட்டப் பட்டுள்ளது. இது ஒரு கருத்துதான். இதற்கு ஆதரவு இல்லையென்றபோதும், ஆய்வு செய்வதற்குப் பயனுள்ள தகவல். புத்த குகைக் கோயில்கள் பின்னர் வேறு மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆனால் இது இணைப்புக் காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சண்டையில் கைப்பற்றப் பட்டதா என்பது தெளிவாக இல்லை. எட்டாம் நூற்றாண்டில், சௌராஷ்டிரா பகுதியிலுள்ள வாலபி மீது அராபியர்கள் படையெடுத்துள்ளனர். ஆனால், இந்த ஊடுருவலை உடனடியாக உள்ளூர் அரசர்கள் தடுத்துள்ளனர். இங்குள்ள சமண விக்கிரகங்களை சமணர்கள் இக்காலத்தில் பத்திர மான இடங்களுக்கு எடுத்துச் சென்றதாக பிற்கால சமண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வாலபி தாக்குதலுக்குப் பின்னர் அராபியர்கள் படிப்படியாக வர்த்தக நிமித்தமாக இப்பகுதிகளில் குடியேறினார்கள். இவர்கள் பெரும்பாலும் தெற்கு அராபியப் பகுதியிலிலிருந்து வந்த, மதப் பழக்க வழக்கங்களில் உள்ளூர்த் தன்மைகள் இணைந்த இசுலாமி யர்கள். ராஷ்டிரகுதா மன்னரின் ஆளுநராக நியமிக்கப்படும் அளவுக்கு உள்ளூர் மக்களுடன் கலந்தவர்கள் என குஜராத் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஏராளமான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக படையெடுப்புக்கு முந்தைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த சமஸ்கிருத, சமண ஆவணங்களில் சோமநாதர் கோயில் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. சாளுக்கிய வம்சம் தோன்றிய பின்னரே  அங்கு ஒரு கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.


    ஆனால், சோமநாதர் கோயில் படையெடுப்பு அல்லது கொள்ளை மதரீதியான படையெடுப்பு அல்ல. அதேபோல முகமது கஜினி இந்தியாவில் இசுலாத்தைப் பரப்பவோ, இங்கு இசுலாமிய ஆட்சியை உருவாக்கவோ இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. முகமதுவைப் பொருத்தவரை காஜானாவத் பேரரசை பாக்தாத் காலிலிப்புக்கு போட்டியாக உருவாக்க நினைத்தார். இதனால் அவரது வரலாற்றை எழுதியவர்களும், அவரது அரசவைக் கவிஞர்களும் தங்கள் மாமன்னரின் வீரபராக்கிரமங்களை அதீதமாக மிகைப்படுத்தி எழுதினார்கள். இதற்கு அவர்களது ராஜவிசுவாசமே காரணம். முகமது இந்தியா வரும் முன்னரே இந்தியாவில் இசுலாமியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அராபியர்கள். இந்தியர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்காக அவர்கள் இங்கு குடியேறினர். ஆனால், முகமதுவின் வருகை வியாபாரம் இல்லை. தனது பேரரசுக்கு செல்வம் சேர்க்க கொள்ளைகளை நிகழ்த்தினார். அப்போது மிகவும் செல்வச்செழிப்புள்ள கோயில் நிர்வாகமாக சோமநாதர் ஆலயம் இருந்தது.


    இந்தியா முழுவதுமிருந்து யாத்திரீகர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அரசும் யாத்திரீகர்களிடம் தனியாக வரி வசூல் செய்தது. தவிர அப்பகுதியைச் சேர்ந்த இந்து, சமண, அராபிய வணிகர்களும் வாரி வழங்கினர். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும், அரசுக்குமே கூட மோதல் இருந்தது. சோமநாத்துக்கு வரும் யாத்திரீகர்களிடம் கொள்ளையடிப்பதை உள்ளூர் மக்கள் வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருந்தனர். சில உள்ளுர்  அரசர்கள் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டனர். எனவே, இந்தளவுக்கு செல்வமிக்க சோமநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி, சொத்துகள் மொத்தத்தையும் முகமது சுருட்டிச் சென்றார். ஆனால், இந்தத் தொகையை அதீதமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளனர். பொதுவாக, படையெடுக்கும் மன்னர்கள் வெற்றியை ருசிக்கும்போது அவர்களது அடுத்த நடவடிக்கை கொள்ளைதான். முகமது மட்டுமல்ல, வட இந்தியாவின் அரசர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த படையெடுத்துள்ளதை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. அவர்கள் இந்து கோயில்களாக இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. பட்டவர்த்தனமாகக் கொள்ளையில் ஈடுபட்டனர்.


    தமிழகத்தில்கூட சோழர்கள் கடல் கடந்து படை யெடுத்தனர். ஆனால், அவர்களும் கொள்ளையடித்த செல்வங்களுடன்தான் வெற்றிப்பெருமிதத்துடன்  திரும்பினர். அத்தகைய பெருமிதம்தான் முகமதுவுக்கு இருந்தது. கோயிலை இழிவுபடுத்தியது தொடர்பாக, அவர் கோயிலை தரைமட்டமாக்கினார். விமானத்தை சுக்கு நூறாக உடைத்தார் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். அது படையெடுப்பின் ஒரு அங்கம். ஆனால், விக்கிரக அவமதிப்பைப் பொறுத்தவரையில், சோமநாத் என்ற பெயரில் உள்ள "மநாத்' என்பதை "மனத்' என்று கஜினி முகமது புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், "மநாத்' என்பது குரானில் குறிப்பிடப்படும் "மனத்' என்ற தேவதை என்று அடையாளம் கண்டு, குரானில் வரும் ஒரு தேவதைக்கு உருவ வழிபாடு செய்வதாக எண்ணி அதற்கு அவமரியாதை செய்திருக்கலாம் என்றும் பரூக்கி என்பவர் மேற்கோள் காட்டுகிறார்.


    இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் "மனத்' தேவதையை வழிபடாமல் மெக்கா பயணம் முழுமையடையாது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. முகமது நபி உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். எனவே, அவர் அதை அழித்து விட்டார் என்றும், முகமது அலிலி காலத்தில் அந்தச் சிலை அழிக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது. அராபிய தொல்குடி இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியபோதே தமது பரம்பரை விக்கிரக வழிபாட்டையும் தொடர்ந்தனர். இன்றும் ஓரளவு விக்கிரக வழிபாட்டை ஏற்கிறவர்கள் இருக்கிறார்கள். உருவ வழி பாட்டை எதிர்ப்பவரான கஜினி முகமது அந்த இசுலாமிய உட்பிரிவுகளை அழிப்பதில் குறியாக இருந்தார்; எனவே, மதத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிவதில் முகமது கஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் நீட்சியாகவே சோமநாத் விக்கிரக விவகாரத்தைப் பார்க்க முடியும். மற்றபடி, சோமநாத் கோயில் கதவை எடுத்துவந்து தமது கோட்டை வாசலிலில் பொருத்தினார் என்பது போன்ற கூற்றுகள் ஆதாரமற்ற மிகைப்படுத்தல்கள். மேலும், சோமநாதர் கோயில் மீண்டும், மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதை இஸ்லாமிய மன்னர்கள் மீண்டும், மீண்டும் தரைமட்டமாக்கியதாகவும் கட்டமைக்கப் படுவதும் தவறு. அராபிய வரலாற்றாசிரியர்கள் மிகைப் படுத்திக் கூறிய இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு காலனியவாதிகள் பரப்பி வந்தனர். இந்துத்வா சக்திகள்  அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்   கொண்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் சமஸ்கிருத, சமண ஆவணங்களில் இல்லை. இதை, ஒரு தொகுப்பு வாசிப்பின் மூலமே தெளிவுபடுத்த முடியும்.


    ஒப்பீட்டளவில் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகவும், அதேசமயத்தில் சாளுக்கியர்கள் கால நிர்ணயத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டவையுமான சமஸ்கிருத கல்வெட்டுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப் பட்டுள்ளது. சோமநாதர் ஆலயக் கொள்ளையடிப்புக்குப் பின்னர் 4 நூற்றாண்டுகள் வரையான சமஸ்கிருத கல்வெட்டுகளை ஆய்வு செய்தால் தவறான கற்பிதங்கள் தெரியவரும். சோமநாதர் ஆலயம் மிக வளம் நிறைந்த தாகவும், சக்தி வாய்ந்ததாகவும் திகழ்ந்ததோடு மட்டுமின்றி அப்பகுதி அரசியலிலும் தீவிரப் பங்காற்றியுள்ளதை அவை காட்டுகின்றன. கோயில் பூசாரிகளை முக்கியஸ்தர்களாகக் கொண்ட நகர நிர்வாகக் கவுன்சில் ஒன்று இருந்துள்ளது. கோயில் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள பாரசீக வணிகர் ஒருவருக்கு இந்த நகரக் கவுன்சில் அனுமதி வழங்கிய தகவலையும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு தரப்பிற்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவியதை இந்த உறவு காட்டுகிறது.

    ஒரு சட்ட ஆவணமாகவும் உள்ள இந்த முக்கியக் கல்வெட்டு கோயில் நிர்வாகம் மற்றும் வணிக சமுதாயத்திற்கிடையே நிலவிய அரசியல் உறவு குறித்த சுருக்கமான சித்திரத்தைத் தருகிறது. முதல் ஆதாரத் தொகுப்பில் இருந்து மாறுபட்ட தகவல்களை வழங்குவதாக விளங்குகிறது. சமஸ்கிருத ஆவணங்களில் குறிப்பிடத் தக்கதாகவும், பொதுவாக எங்கும் பயன்படுத்தப்படாததாகவும் உள்ள ஒரு ஆவணம் சோமநாதர் ஆலய அகழ்வுப்பணிகள் குறித்த அறிக்கை ஆகும். 1951-இல் இந்த அகழ்வுப் பணி நடந்தது. இது பல யதார்த்தமான தகவல்களை வழங்கு கின்றது. அதாவது கோயிலிலின் பரப்பளவு, கோயிலிலின் சொத்து மதிப்பு குறித்து துருக்கிய - பாரசீக ஆவணங்கள் வழங்கும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், அதனை அடிப் படையாகக் கொண்டு தற்கால இந்துத்வா சக்திகள் தரும் சித்திரம் ஆகியவற்றுக்கு மாறாக ஒரு யதார்த்தமான, தெளிவான சித்திரத்தை வழங்குகிறது. இதனால்தான் இரு தரப்பு மத தேசியவாதிகளும் இந்த வரலாற்று ஆவணங்களை இருட்டடிப்பு செய்து வந்துள்ளனர்.


    மூன்றாவதாக சமண நூல்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஆகும். இவை பெரும்பாலும் மேற்கிந்தியாவைச் சேர்ந்தவை. இப்பகுதியைச் சேர்ந்த சமணப் பிரிவுகள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தருவதாகவும், சமண மதத்தைப் பேணிய ஆட்சியாளர்களின் வரலாற்று நூல்களாகவும் இவை உள்ளன. சமண ஆட்சி யாளர்களும், சமண வணிகர்களும் சோமநாதர் ஆலயத்துக்கு வழங்கிய கொடைகளைச் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இத்தகவல்கள் முதல் தொகுப்பில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. அழிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாக முதல் தொகுப்புத் தகவல்கள் கூறு கின்றன. சோமநாதர் படையெடுப்புக்குப் பின் அங்கு சகஜ நிலை ஏற்படவேண்டும் என்பதில் சமண வணிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் வர்த்தகம் சீர்படும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இக் காலகட்டத்தைச் சேர்ந்த காவியங்கள் சோமநாதர் ஆலய படையெடுப்பு ஏற்பட்டபோதும்கூட ராஜஸ்தான், குஜராத் ஆட்சியாளர்களுக்கும், டில்லிலி சுல்தான்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதை விளக்குகிறது.


    நான்காவது தொகுப்பு கஜினி முகமது மீதான வாய்மொழி வரலாறு ஆகும். இவை 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிவு செய்யப்பட்டவையும், சேகரிக்கப் பட்டவையுமாகும். இவை கஜினி முகமது மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் எவ்வாறு மக்களால் பார்க்கப்பட்டனர் என்ற வேறுபட்ட முகங்களைக் காட்டு கின்றன. பெருவாரியான மக்கள் மத்தியில் வழங்கப் பட்டு வரும் சமகால தகவல்களாகவும் அவை உள்ளன. பீர்கள், பக்கீர்கள், குருநாதர்கள் என பல்வேறு புனிதர்கள் குறித்து வெகுஜனமக்கள் அளவில் பாடப்படும் பல பாடல்கள் உள்ளன. இவர்கள் பல சமயத்தவர்களாக இருந்த போதும் கஜினி முகமதுவையும் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவை யாவற்றையும் அதீத மானது என வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ள தையும், இவற்றைத் துல்லிலியமான வரலாற்றுத் தடயங்களாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும் அவை தனித்த ஒரு இலக்கிய வடிவத்தை அளிக்கிறது என்பதையும், இவற்றில் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த சமூகங்களின் மதிப்பீடுகள் பிரதிபலிலிப்பதையும் காண முடிகிறது. இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலமே ஒரு நிகழ்வு குறித்த வெகு ஜனமக்கள் சமூகத்தின் பிரதிபலிலிப்பையும், புரிந்து கொள்ள லையும் உணர முடியும். அரசவை ஆவணங்கள், அரச காப்பியங்களில் இவற்றைக் காண இயலாது.


    சோமநாதர் படையெடுப்பு நிகழ்ந்ததில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரதிநிதித்துவ அரசியலில் காணப்படக்கூடிய கற்பிதங்கள் சமகால ஆதாரங்களிலும், பிற்கால ஆதாரங் களிலும் விரவியுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட பல்வேறு ஆதாரத் தொகுப்புகளையும் ஒன்றிணைத்து ஆய்வுசெய்யப் படும்போதே நிகழ்வின் பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களைக் களைய முடியும். பல்வேறு ஆதாரங்கள் மத்தியில் ஒரு வரலாற்று நிகழ்வு குறித்த உறவு எவ்வாறு நிலவுகிறது; கூட்டு நினைவுகள் என்று கூறப்படும் இந்தக் கட்டமைப்புகள் எவ்வாறு எதிர்மறையாக அமைகின்றன என்பதற்கு இந்த வாசிப்புமுறை ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.


    1951-இல் எடுக்கப்பட்ட அகழ்வாய்வு ஆதாரங்கள் தவிர அனைத்து ஆதாரங்களுமே 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதலே காணக் கிடைப்பவைதான். ஆனால், இவையாவும் ஒட்டுமொத்தமாக ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்து முடிவுகள் எட்டப்படுவதில்லை. பாரசீக மொழி ஆதாரங்கள் அதிகமாக இருப்பதும், இந்திய வரலாற்றை இந்துக்கள் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, ஆங்கிலேயர் வரலாறு எனத் தவறாகக் கால வரிசைப்படுத்திப் புழங்குவதுமே இதற்குக் காரணம். மேலும், இந்து வரலாறு சமஸ்கிருத பிரதிகள் வாயிலாகவும், இசுலாமிய வரலாறு பாரசீக, அராபிய பிரதிகள் வாயிலாகவும், ஆங்கிலேய வரலாறு ஆங்கிலப் பிரதிகள் வாயிலாகவும் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்துப் பேரரசர்கள் ஆட்சிக்காலம் என்று கருதப்படும் கி.பி. 1200-க்குப் பிறகான கால கட்டங்களை அறிவதற்கு - இக்காலகட்டம் இசுலாமிய ஆட்சிக்காலம் என்றும், இதன் தகவல்களைப் பாரசீகப் பிரதிகள் மூலமே அறிய முடியும், சமஸ்கிருத ஆதாரங்கள் பயன்தராது என நம்பப்பட்டு வந்துள்ளது. இது ஒரு தவறான தர்க்க வாதமாகும். இந்திய வரலாற்றைத் துண்டு துண்டாகப் பிரிப்பதும், அவற்றினூடாக எவ்விதமான இணைப்புகளோ, தொடர்புகளோ இல்லை என்பதும் எவ்வளவு தூரம் பிழையானது என்பதையும் கூட்டு வாசிப்பின் மூலம் தெரியவரும். இவ்வாறு துண்டாடுவது வரலாற்றினை ஒரு உறைநிலையில் வைத்துவிடும்.


    ஐந்தாவது தொகுப்பு ஆவணம் 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுசபை (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) யில் நிகழ்ந்த விவாதமாகும். இந்திய (இந்து) மதத்துக்கு ஆதரவாக வளையும் எண்ணத்தில் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் செயல்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் எழுந்துள்ளது. முகமது கஜினியின் சோமநாதர் ஆலயப் படையெடுப்பு, அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி, தொடர்ந்து உருவான முகமதியர் ஆட்சி ஆகியவற்றினூடாக இந்து வெகுஜனமக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகிவிட்டதாக ஒரு கருத்து வலிந்து உருவாக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் முதன்முறையாக இந்த நீண்ட விவாதம் நடந்துள்ளது. எதிர் விரோத மத சமுதாயங்கள் மற்றும் துவேஷ நினைவுகள் குறித்த பிரச்சனையை இவ்விவாதம் எழுப்பியுள்ளது.


    ஒரு நிகழ்வு தேசியம் குறித்த அரசியலிலின் குறியீடாக்கப் படுவது 20-ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவில்தான் தொடங்கியுள்ளது. இந்து அடிமைத்தனம் மற்றும் முஸ்லிம் ஆட்சியில் ஏற்பட்ட துயரத்தின் குறியீடாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு பார்க்கப்பட்டது. சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதான் இன்று மதச்சார்பற்ற தேசியவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் மத்தியில் தீவிர விவாதத்துக்குரிய பிரச்சனையாக மாறியது. மத அடையாளத்துடன் கூடிய  அரசியலை சுவீகரிக்கும் எண்ணத்துடன் இது தொடங்கப் பட்டது. 1951-இல் சோமநாதர் ஆலயம் மறுபடியும் கட்ட மைக்கப்படுவது வரை இது இட்டுச்சென்றது.


    ஆனால், இந்த ஆவணங்களை இன்று மறு ஆய்வு செய்யும்போது சோமநாதர் ஆலயப் படையெடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள் குறித்த மாறுபட்ட வாசிப்பு அனுபவமாகிறது. இதில் பல கேள்விகள் எழுகின்றன: சோமநாதர் ஆலய நிகழ்வு குறித்து வேறுபட்ட இந்திய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட வழிகளில் எதிர்வினையாற்றியுள்ளனரா? கோயில் சிதைக்கப்பட்டதற்கு மத வெறுப்பு மட்டும்தான் காரணமா? சேதாரம் பற்றி மிகைப் படுத்திக் கூறப்படுவது அரசியல் காரணங்களுக்காகவா  அல்லது மிகைப்படுத்திக் கூறப்படவில்லையா? இந்து - முஸ்லிலிம் என முத்திரை குத்தப்பட்ட மத சமுதாயங் களாகத்தான் அன்று அவர்கள் வாழ்ந்தார்களா? அல்லது தங்களை எந்த ஒரு தனிச்சமுதாயத்தின் அங்கமாகவும் பாராமல் பல்வேறு சமுதாயங்களிடையே கொடுக்கல் - வாங்கல்கள் மூலமாக உருவான உறவுகள் கொண்ட பன்முகத் தன்மை கொண்டவர்களாக இருந்தார்களா? கடந்த காலம் குறித்து ஒரே விளக்கம் மட்டுமே திரும்பத் திரும்பத் தரப்பட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை நம்முள் திணிப்பது அல்லது கடந்த காலத்தைத் திக்குத் தெரியாத கானகமாக்குவது என்கிற காலகட்டத்தில் இக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அதிலிலிருந்து விலகி முன்னேற முடியும்.


    கஜினி முகமது , சோமநாதர் ஆலயம் மற்றும் குஜராத் வரலாறு குறித்து கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தவிர பெரும்பாலானவை சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை வலிலியுறுத்தி எழுதப் பட்டவை. குறுகிய நோக்கில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் இந்திய வரலாறு குறித்து காலனிய சக்திகள் கட்டமைத்த வற்றைப் பின்பற்றி எழுதப்பட்டவை. குறிப்பாக கே. எம். முன்ஷி போன்றோர் முன்வைத்த கருதுகோள்களுக்கு அன்றைய பிரதமர் நேரு ஆணித்தரமாக அளித்துள்ள பதில் களை காணலாம். இந்திய வரலாறு குறித்த தொடக்ககால நூல்களை காலனிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டே எழுதத் துணிந்தது ஒரு வரலாற்று சோகம். அவை இந்து வரலாறு என்றும், இசுலாமிய ஆதிக்க வரலாறு என்றும், ஆங்கிலேய வரலாறு என்றும், இவற்றில் ஆங்கிலேயர் காலமே சிறந்தது என்றும் காலனிய வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் என்றென்றும் மத மோதல்கள் இருந்தன என்றும், இசுலாமியர் ஆட்சிக்குப் பிறகே இது தொடங்கியது, இதைத் தொடங்கியவர் கஜினி முகமது என்றும் அவர்கள் திட்டமிட்டு வரலாற்றைக் கட்டமைத்தனர். இதிலிலிருந்தே இந்தியா இரண்டு தேசங் களைக் கொண்டது என்ற மதவாதக் கருத்துரு உருவாகியது. இதற்கு மையப்புள்ளியாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு நிகழ்வு முன்மொழியப்படுகிறது. எனவே பிற்கால வரலாற்றாசிரியர்களும் இதிலிலிருந்து மீள முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிச் சுழன்றுள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad