Header Ads

  • Breaking News

    🌹யாசகிக்காத நாளில்லை நாயகமே....🌹





    🌹யாசகிக்காத நாளில்லை நாயகமே....🌹


        எங்களுயிரே கண்மணியருளே!

    உங்கள் நினைவிலிருந்து விலகாத  சிந்தனையைத்தான் அல்லும் பகலும்  யாசிக்கின்றோம்!


    அண்ணலே  உங்கள் நினைவு மலர் சுமக்காத பொழுதுகளெல்லாம் வெறுமைதான் நிலவுது நாயகமே!

    பொருமை எங்களை விட்டும் விலகுது பொன்னாரமே!


    எங்களின் அருமையே! கருணையே!

    எல்லா நேர நிமிடங்களிலும் 

    எங்கள் எண்ணக்கிண்ணம் 

    உங்கள் ஆசிப்பு தேனால் நிறைந்திருக்க வேண்டும்!


    எங்கள் இதயத்திரைகள் உங்கள் புகழாரக் கவிதையால் 

    வரைந்திருக்க வேண்டும்!


     விழி மூடி முழிக்கும் தருணமெல்லாம் உங்கள் நினைவை சுமந்திருந்த சுகமான சுமையுடன் தான் விழிக்க வேண்டும்!


    யாம் விடும் ஒவ்வொரு மூச்சின் சுவாசமும்  உங்கள் சகவாசங்கொண்ட சுகவாசமாய்த்தான் வீச வேண்டும்!


    எமது  அங்க அசைவெலாம் திங்களே உங்கள் தங்க இசைவில் கிடைத்த பங்கமில்லா 

    தசைகள் தானென்னும் எண்ணம் எம்முள் சதா ஜபிக்கப்பட வேண்டும்!


     எங்கள்

    நயனமணியின் அயற்ச்சியில்லா சுழற்சியெல்லாம் 

    உங்களைத் தேடியலைபாயும் 

    கருமணியாய் ஜொலிக்க வேண்டும்!


     எமது நாசிக்குள் நுகரும் நறுமணங்களெல்லாம்  தங்கள் திருமேனியில் கமழும் பெரும் மணமென உணர வேண்டும்!


    நாங்கள் நடக்கும்  நடையெல்லாம் உங்களைப் புகழ்ந்திடும் அவைக்கானதாய் 

    இருக்க வேண்டும்!


    நாங்கள் எழுதும் எழுத்தெல்லாம் உங்கள் புகழாகவே 

    திகழ வேண்டும்!


     நாங்கள் உண்ணும் உணவெல்லாம் உங்கள் பூவிதழில் நுழைந்த உணவென்னும் உணர்வுடன் உண்டுமகிழ வேண்டும்! 


     நாங்கள் குடிக்கும் மிடர்களெல்லாம்  உங்களிதழூறும்  நோய் தீர்க்கும் உமிழாயிருந்து  அதுவே அனுதினமும் மருந்தாய் எம் பிணியகற்ற வேண்டும்!


     நாங்கள் திரும்பும் திசையெல்லாம்  தாங்கள் விரும்பும் மனிதர்களாயிருக்க வேண்டும்!


     யா ரஸூலே ஹுதா! உங்கள் மேலுள்ள மனிதக்காதலுக்கப்பாற்பட்ட மோகத்தால் 

    இன்னும்  ஏராளமான தாகம் வேகமும் இருப்பினும்  இந்த  சுலோகச் சொல்லால் சொல்லி முடிக்க முடியாது நாயகமே! முன்னவனின் முதல்வரே!

    எம்முயிரே ஏந்தலரே!........


    ✍🏻_ எம், சலீமாபானு பிலாலிய்யா.........

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad