🌹தெய்வீக தென்றலின் மன்றல் 🌹
🌹தெய்வீக தென்றலின் மன்றல்.....🌹
யா நபியல்லாஹ்!
திக்கெங்கும் தீன் முழக்கமென புழக்கத்திலுள்ள பழக்கமெல்லாம் மன்னர் மஹமூதருங்கள் மேலான மங்கல கலசமாகிய ஸலவாதென்னும் சந்தனம் மணக்கும் சங்கநாதம் தான் நாயகமே!
அந்த தங்க கீதமே எங்கள் வாசல்களுக்கு வைகரை வெளிச்சமாகி, தெய்வீக தென்றலாய் மன்றல் மடல் வாசிக்கின்றது!
திங்கள் நபியே சங்கையருளே!
எமக்குள் பொங்கும் இக் கவியெல்லாம் எங்கும் இரவல் வாங்கியதுமல்ல, எமக்கு சொந்தமானதுமல்ல நாயகமே!
ஈடிணையில்லான் அல்லாஹ் தனது பீடு பெருமைக்கு சொந்தக்காரர்களான
தங்களை இந்த பாமரரின் விரல் மூலமும் பாராயணிக்க தெரிவு செய்த தெள்ளிய கவிமாலையிது!
அன்றைய மதீனமாநகரில் தங்கள் திரு வாசலின் துப்புறவு தொழிலாளியாய் சேவகம் செய்ய யாம் இல்லாமல் போனோமே,
என்று அழுது பிரளாபித்தமைக்கு
இன்றைய பொழுதில்
இறைவன் போட்ட பிச்சையாய் இந்த செல்லக்கிறுக்கலும்
கவிதையெனும் நிலாவாய் உலாவந்து அரங்கேறும் வரம் பெற்றிட்டது!
இலக்கிய நயத்துடன் துலக்கும் தூய கவிஞர்களெல்லாம்
நேய நபிகளாரின்
நேர்காணலும், பொன்னாடை போர்த்தலும், பெற்று பெருமையடைந்திட்டார்கள்!
அவர்கள் சிந்திய எழுத்தைப் பொருக்கி எடுக்கக் கூட அரிந்திராத எமக்கு
விந்தையாய் விரியும்
இவ் வரிகளெல்லாம் வேந்தனவன் சொந்தமதே!
அன்றி எமதென்று சொல்லுதற்கு என்ன அருகதையுண்டு?
முன்னவன் தந்த இம்முழுமை வாழ்விற்கும், உங்கள் உம்மத்தென்ற போர்வைக்கும், முகம் தூக்காமல் முக்காலமும் ஸஜ்தாவில் சாய்ந்திடினும், நன்றிசெய்து முடிந்திடுமாமோ!
_எம், சலீமாபானு பிலாலிய்யா........
No comments