கவிதை வடிவில் மிஃராஜ் பற்றி சிறு துளிகள்
🌷விண்ணேகிய இப்பகலில் சிறு துகல் பரிமாற்றங்கள்......🌷
இறை ஜோதியில் கலந்து வந்த நிறை நீதியாம் நம் குறை நீக்கிய மறையேந்தும் மாநபிகளாரின் வேணவாவான விண்ணேகும் ஞானப்பயணம் தீன் முழங்கும் வான்புகழ் நாயகர்களான மலாயிக்கீன்களுடன் மங்கலகானமிசைத்தவாறு திங்கள்திருராஜரை சங்கை செய்த நன்னாளாம் இன்னாள் நமக்கெல்லாம் பொன்னாள்!
என்னென்று சொன்னாலும் கண்ணாளரின் இன் நன்னாள் நிகழ்வுகளை நம்மால் எடுத்தியம்பவோ, அடுத்தடுத்து
தொடுத்தெழுதவோ, முடிந்திடுமாமோ?
முதல் வானில் ஆதிதந்தை ஆதம் நபி தனதரும் தங்கமகனாராம் சிங்காரத் திங்கள் வதனத்தாரை வரவேற்று வாரியணைத்து வாழ்த்து சோபனங் கூறி அன்பே ஆருயிர் மகவே! பண்பின் பனிமலையே!
கனிவின் கார்முகிலே!
என்னுயிரே கண்மணியேவென ஆலிங்கனித்து, ஆராதித்து, கேளுங்கள் உம்மத்திற்கு, கிடைப்பதற்கரிய மன்னிப்பு வரமென்று அறம் பகர்ந்து இரண்டாம் வானம் வழியப்பி வைத்தனர்!
இரண்டாம் வானில் ஈஸா,யஹ்யா அலைஹிமஸ்ஸலாமவர்களின்
நாயக நேய தூய ஸ்தூலம் காண தாயைக் காணவிருக்கும் சேயைப்போல எதிர்பார்த்த நயனமணிகளுடன், புகழாரம் ஓதும் இதழ்த் தேனுடன்,
எதிர்பார்த்திருக்க, வான் கதவு தட்டப்பட்டு திறக்கப்பட்டதும்,
சுட்டும்விழிச்சுடர் கொண்டு பட்டுக்கரங்களால் கட்டியணைத்து நபிபட்டுடலைத் தொட்டுத் தொட்டுப்பார்த்து முத்துப்பல் சிரிப்பும் மோகனராகமுமாய்
பாராயணகானம் பாடும் வானம்பாடியாகலானார்கள்!
ஆங்கும் இந்த உம்மத்துக்களின் உயர்நலன் பற்றித்தான் பரிவர்த்தனை செய்யப்பட்டு பின் மூன்றாவது வானம் வழியனுப்பு விழா நடந்தேறியது!
அவ்வானத்து முகப்புக்கதவு தட்டித் திறக்கப்பட்டதும்,
உலகின் பேரழகர் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் தன்னைக்காண மின்னும் அழகராம் கண்ணொளி நாதரை,காத்துக் காத்து கண்கள் பூத்திருந்த ஹாத்தமுன் நபிகளைக் கிட்டே வந்து கட்டித்தழுவி பார்த்துப் பார்த்துப் பரவசித்து பூவிதழால் புகழாரம் ஸ்தோத்தரித்த வண்ணம் நான்காம் வானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனுப்புதல் நிகழ்ந்தன!
தொடரும்!...….
✍🏻_எம், சலீமாபானு பிலாலிய்யா....
No comments