Header Ads

  • Breaking News

    வலிமார்களின் மகத்துவங்கள்


     🌻 *வலிமார்களின் மகத்துவங்கள்* 🌻


                 *"மனிதன் எனது இரகசியம், நான் அவனது இரகசியம்” (அல்இன்ஸானு ஸிர்ரீ, வஅனஸிர்ருஹு)* என்று அல்லாஹ் கூறியதாக ஹதீது குதுஸியில் வந்துள்ளது.


          மானிடனை இறைவன் தனக்குப் பிரதிநிதியாக்கி உலகிலுள்ள எல்லாக் கருமங்களையும் அவன் வசம் ஒப்படைத்து அவனைத் தனக்கும் தன்னுடைய சிருஷ்டிகளுக்கும் இடையே நடு மையமாய் நிறுத்தி, சிருஷ்டிகள்

    ஆண்டவனுடைய தஜல்லியைக் கொண்டு கரிந்து போகாமல் காப்பாற்றக்கூடிய திரையாக ஆக்கியிருப்பதால் மானிடன் ஆண்டவனுடைய உலூஹிய்யத்துடைய தஜல்லியில் வெளியாகி விட்டான். உலூஹிய்யத்துடைய தஜல்லி ஒருவனில் வெளியானால் அவன்

    ஆண்டவனிடத்தில் சொந்தமான சில பதவிகளைப் பெறுவான். அவ்விதம் பெற்றதும் அவன் உலகத்தார் சகலருக்கும் *'றஹ்மத்'* தாகி விடுவான். ஆகவேதான், அவுலியாக்கள் ஆண்டவனது *பிரதிநிதிகளாக* இருக்கின்றனர்.


            எங்ஙனம் *நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்தார்களுக்கு அருட்பிளம்பு (றஹ்மதுல்லில் ஆலமீன்)* ஆக

    இருக்கின்றார்களோ அங்ஙனமே அவுலியாக்களை ஆண்டவன் அகிலத்தாருக்கு கிருபையாளராகப் புவியின் கண் உண்டாக்கி இருக்கின்றான். ஆகையால், அவர்களும் அவனுடைய பிரதிநிதிகளாகவே

    இருக்கின்றார்கள், *அவர்கள் சொல்வது அல்லாஹ் சொல்வதுதான். அது அல்லாஹ்வுடைய அடியாரின் நாவிலிருந்து வெளியானாலும் சரியே என்பதாக மஸ்னவீ-ஷரீபில் மௌலானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி றஹ்மத்துல்லாஹி அலைஹி* அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.


         றஸுலுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதென்றும், றஸூலுடைய கரத்தை அல்லாஹ் தன்னுடைய கரமென்றும், றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எறிந்த மண்ணை அல்லாஹ் தானே எறிந்ததாயும் குர்ஆன் ஷரீபில் காணப்படும் ஆயத்துகளெல்லாம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உரியதாயிருந்த போதிலும், குத்புமார்கள், ஆரிபீன்கள், அவுலியாக்கள் ஸாலிஹீன்கள் ஆகியோரையும் சார்ந்தவையே. ஏனெனில் இவர்கள் அனைவரும், *“உலமாக்கள் அன்பியாக்களுடைய வாரிசுகள்"* என்ற ஹதீதுப் பிரகாரம், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உண்மை வாரிசுகளாவர்.


        *“நான் அல்லாஹ்வுடைய ஒளியில் நின்றுமுள்ளவன்: சகல வஸ்துக்களும் என்னுடைய ஒளியில் நின்றுமுள்ளவை” (அனமின்னூரில்லாஹி வகுல்லுஷையின் மின்னூரீ)* என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை ஆராயந்துணர்ந்தோர் ஒருவாறு அறிவர்.


           சிருஷ்டிகள் அனைத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜோதியில் சம்பந்தப்பட்டதாயினும், அந்த ஜோதி ஆண்டவனைச் சார்ந்ததேயாம். எந்த வஸ்துவுக்கும் கொடுக்கப்படாத விலை மதிக்கவொண்ணா மாணிக்கமாகிய பகுத்தறிவு, படைப்புகளில் மேலான படைப்பாகிய இன்ஸான் எனும் மானிடனுக்கு மட்டிலுமே கொடுக்கப் பட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக விளங்கக் கிடக்கின்றது. அந்தப் பகுத்தறிவைக் கொண்டு மானிடன், நான் எனும் அனானிய்யத்தைப் போக்கி விட்டால் தரிப்பட்டிருப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூர் என்னும் ஜோதிப் பிரகாசமேதான். அங்ஙனமே அமல் செய்து அந்த நூரில் தரிபட்டிருப்பவர்கள் வலிமார்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவர், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைய பிரதிநிதிகளாவர், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரதிநிதிகள் உள்ரங்கத்தில் (ஹகீகத்தில்) அல்லாஹ்வுடைய பிரதிநிதிகளேயாவர். இவர்களைப் பின்பற்றுதல் நேர் வழியாகும். ஏனெனில், இவர்களெல்லாரும் அல்லாஹ்வுடைய அஸ்மாஸிபாத்து வெளியாகும் மள்ஹரு (தானம்) ஆக இருப்பதால் இவர்கள் அவனது பிரதிநிதிகளாயிருந்து ஹுக்முகளை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்களுடைய நாட்டம், சொல், செயல் அனைத்தும் அவனுடையதாயிருப்பதால் இன்னவர்களுக்கு வழிப்படுதல் ஹகீகத்தில் அவனுக்கு வழிப்படுதலேயாகும். இவர்களுக்கு மாற்றஞ் செய்தல் அவனுக்கே மாற்றம் செய்தலாகும்.


          இறைவனும் குர்ஆன் ஷரீபில், *“றஸுலுக்கு வழிபட்டவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவர்”* (4:80) என்றும்,


          *“எவனொருவன் அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் மாறு செய்வானோ அவன் நிச்சயமாக வெட்ட வெளிச்சமான வழிகேட்டிலானான்”*

    என்றும்,


           *"ஓ, ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் ரஸுலுக்கும் உங்களில் நின்றுமுள்ள காரிய கர்த்தர்களுக்கும் (தீனைப் பரப்பக்கூடிய உலமாக்களுக்கும் அவுலியாக்களுக்கும்) வழிப்படுங்கள்”* (4:59) என்றும் கூறியுள்ளான்.


     (தப்ஸீர் கபீர், 3-வது பாகம், 243-வது பக்கம்-தப்ஸீர் ரூஹுல்பயான், 1-வது பாகம் 624-வது பக்கம்

    காண்க.)


       *'என்னுடைய அவுலியாக்கள் எனது பரிவட்டத்திற்குள்ளிருப்பவர்கள். என்னைத் தவிர வேறு யாரும் அவர்களை அறிய மாட்டார்கள்'* என்ற ஹதீது குதுஸி அவுலியாக்களின் மகத்துவத்திற்கு நற்சாட்சியாக இருக்கின்றது.


    மேலும், *மஸ்னவீ ஷரீபு* முழங்குவதைப் பாருங்கள்:


    *“அவுலியாக்கள் ஆண்டவனுக்கு உகப்பானவர்கள்*

         *அந்தரங்க, பகிரங்க விஷயங்களை அறிந்தவர்கள்*

    *முத்லக்கான அல்லாஹ்வுக்கு அவுலியாக்கள் கண்ணாடியானவர்கள்*

        *அவுலியாக்கள் அல்லாஹ்வின் சொந்தமான கண்ணாடியாக இருக்கின்றார்கள்*

        *ஒவ்வொரு வலியும் நூஹு அலைஹிஸ்ஸலாம் உடைய கப்பல் என்று அறி, இவர்களை நேசித்தால் நாசம் என்னும் வெள்ளத்தில் நின்றும் தப்பித்துக் கொள்வாய்*

        *அல்லாஹ்வுடனிருக்கப் பிரியமுள்ளவர்கள் அவுலியாக்களுடைய சமுகத்தில் இருப்பார்களாக*


      *அவுலியாக்களுடைய சமுகத்தில் நின்றும் விலகி இருப்பீர்களேயானால், உள்ரங்கத்தில் அல்லாஹ்வை விட்டும் தான் விலகி இருக்கின்றீர்கள்”*


    *குலிஸ்தான்* போதிக்கின்றதாவது


         *“அவுலியாக்களுடைய முந்தானையைப் பற்றிப் பிடிப்பதில் பயம் வேண்டாம்.* ஏனெனில், நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களோடிருக்கையில் வெள்ளத்தைப் பற்றிய அச்சம் எதற்கு!” ஆகவே, *இறைவன் அன்று அன்பிய்யாக்களைக் கொண்டு நடத்தியவற்றை எல்லாம் இன்று அவுலியாக்களை கொண்டுதான் நடத்துகின்றான்.* அவர்களை முன்னிட்டே உலகமும் நிலைபெற்றிருக்கின்றது. ஆகையால் *"வலியை அறிவது அல்லாஹ்வை அறிவதைவிட மிகக் கடினம்"* என்பதாக


       (ரூஹுல் பயான் பாகம் 9, 531-வது பக்கம் 9, பக்கம் 10) கூறுகின்றன.


    🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

    நூல் : *ஹிதாய‌த்துல் அனாம் - இலா ஜியாரத்தில் அவ்லியா இல் கிராம்*

    பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

    🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad