குத்பிய்யத்தின் பெருமை
🌻 *குத்பிய்யத்தின் பெருமை* 🌻
*உலகில் ஏக காலத்தில் பல எண்ணிக்கையுள்ள, பலவகை படித்தரங்கள் உடைய அவுலியாக்கள், குதுபுமார்கள், அப்தால்கள், அவுத்தாதுகள், நுகபாக்கள், நுஜபாக்கள் என்ற பதவி உடையவர்கள், உலக முடிவு நாள்வரையில் இருந்தே வருவார்கள் என்றும், ஹகீகத்தில் ஈருலகையும் கண்காணிப்பவர்கள் அவர்கள் தானென்றும்,* அவர்களை முன்னிட்டே பலாய், முஸீபத்துகள் விலக்கப்படுவதாயும் ஹதீதுகள் பல காணப்படுகின்றன, அன்னார் அனைவருக்கும் *குத்பே அதிபராவார். அன்னாரை கௌது என்றும்* சொல்லப்படும். இது பற்றிய ஆதாரங்கள் பல இருப்பினும் சிலவற்றை மட்டிலும் இங்குக் குறிப்பிடுவது போதுமெனக் கருதுகின்றோம்.
"யா அல்லாஹ்! என் மீது நபிமார்கள் நடந்து திரிந்தார்கள், அவர்களுக்குப் பிறகு நபிகள் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுமந்திருந்தேன். தற்போது அவர்களும் சென்று விட்டார்களே, நான் தனித்துவிட்டேனே, என் மீது எந்த நபியும் இல்லையே” என்பதாய் பூமி பிரலாபித்து இறைவனிடம் முறையிட்டுக் கொண்டது.
*'நான் சில அவுலியாக்களை அனுப்புவேன். அவர்களது இருதயங்கள் நபிமார்களது இருதயங்களைப் போலிருக்கும், அவர்கள் யுகமுடிவு வரை உன் மீது சஞ்சரிப்பார்கள்'* என்று அல்லாஹ் பூமிக்கு அறிவித்தான்; என்ற இவ்விஷயத்தை ஸாலிஹான, இறையருள் நேசரான, பெரியார் ஒருவர் தமது
உலக யாத்திரையின் போது, நித்திய ஜீவனுடைய *ஹஜ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம்* அவர்களைச் சந்தித்த சமயம் அன்னாரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக, *'மவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது"* எனும் கிரந்தத்தில் காணப்படுகிறது.
*"அந்த அவுலியாக்கள் ஏகத்தில் 440 பேர்கள். அவர்களுள் நுஜபாக்கள் 300, நுகபாக்கள் 70, அப்தால்கள் 40, அகியார்கள் 10, உற்பாக்கள் 7, அன்வார்கள் 5, அவுத்தாதுகள் 4, முக்த்தார்கள் 3, குதுபு ஒருவர். குத்பே அனைவருக்கும் அதிபராவார். இன்னாரை கௌது என்றும் சொல்லப்படும். இவர்களுள் யாரும் மரணமாவார்களாயின் அவர்களுக்கடுத்த (தரஜா) படித்தரத்திலிருப்பவர்கள் அந்த ஸ்தானத்திற்கு மாற்றப்படுவார்கள், அங்ஙணம் பதவியில் உயர்த்தப்படும் போது, கீழ்ப்படித்தரத்திலுள்ள நுஜபாக்கள் காலியாகுமிடத்தில் ஸாலிஹீன்களான முஸ்லீம்களில் ஒருவர் அந்தத் தானத்தில் அமர்த்தப் படுவார்”* என்று கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக *மனாகிபுகுத்பில் மஜீதிஸ்ஸையிது ஷாஹுல் ஹமீதில் மாணிக்கப்பூாயில் மவுலிதிந் நாகூரிய்யில் மர்கதி'* என்ற கித்தாபில் மாதிஹுர் ரஸுல் அல்லாமா ஷைகு ஸதக்கத்துல்லாஹில் காஹிரிய்யிஸ் ஸித்தீக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது சீடர் அல்லாமா ஆரிபுபில்லாஹ் மஹ்மூது தீபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், மவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது எனும் கித்தாபில், காயல்பட்டணத்தில் பிறந்து கீழக்கரையில் அடங்கி இருக்கும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற அல்லாமத்துல் பாளில் ஸையிது முஹம்மது ஆரிபுபில்லாஹி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் கூறுகின்றார்கள்.
இவை போன்ற பல அபூர்வ விளக்கங்களை 'மஜ்மூ அத்துர் ரஸாயில் 2-வது பாகம் 264-வது பக்கத்தில் "றத்துல் முஹ்த்தார்' இயற்றிய அல்லாமா இபுனு ஆபீதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் விபரமாக வரைந்துள்ளார்கள்.
மேலும் *இமாம் ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் "அல்யவாக்கீத்து வல் ஜவாஹிர்'* என்னும் கிரந்தத்தில் குத்புமார்களின் தரஜா, பதவிகளை விவரமாக எழுதியுள்ளார்கள். இன்னும், *இமாம் இபுனு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்* தங்கள் "ஃபதாவா ஹதீதிய்யாவிலும்" விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், *என்னுடைய உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இருதயத்தையுடையவர்களாய் என்றும் இருந்தே வருவர். அல்லாஹ்தஆலா அந்த நபர்களைக் கொண்டு பூலோகத்தில் வாழுபவர்களை விட்டும் பிணிகளைப் போக்குவிப்பான். அவர்களுக்காக மழையைப் பொழியச் செய்வான். அன்னவர்களைக் கொண்டுதான் பூலோகத்திலுள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்* என்பதாய் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீது *தப்றானீயில்* காணக் கிடைக்கின்றது.
குத்புக்கே கெளது என்று பெயர். அவர் ஒருவருக்குப் பின் ஒருவராக வருவார். படைப்புகளை எல்லாக் கருமங்களிலும் அன்னார் இரட்சிக்கக் கூடியவராக இருப்பதனால் கௌது என்று பெயர், அன்னவருக்கு வலம், இடம் இருபக்கங்களிலும் அரசர்களுக்கு இருப்பதுபோல இரு அமைச்சர்கள் உள்ளனர். கெளது உடைய உத்தரவு கொண்டு வலது பக்கமிருப்பவர் மறைவுலகங்களான ஆலமுல்கைபு, ஆலமுல் மலகூத்தை நிருவகித்து வருகின்றார். இடது பக்கமிருப்பவர், வெளியுலகமான ஆலமுஷ்ஷஹாதத்தைக் கண்காணித்து வருகின்றார் என்ற விபரத்தை *வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்து அரபிக் கலாசாலை மத்ரஸா ஸ்தாபகர், ஹஜ்ரத், அல்லாமா, ஷைகு அப்துல் வஹ்ஹாபு ஸாஹிபு ரலியல்லாஹு தஆலா அன்ஹு" அவர்களது ஞான குரு ஹஜ்ரத் ஆரிபு பில்லாஹி, அல்லாமா ஷைகு ஷாஹ் முஹியித்தீன் ஸாஹிபு வேலூரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஜவாஹிருஸ்ஸுலூக்கு* எனும் கிரந்தத்தில் *114-வது* பக்கத்தில்
வரைந்துள்ளார்கள்.
மேலும் இது போன்ற விபரங்கள் *ரூஹுல்பயான் தப்ஸீர்* பாகம் 2, பக்கம் 363லும், *இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்களைக் கொண்டு விபரமாகச் சொல்வதை அறிவிக்கப்படுகிறது.
*"அந்தரங்க, பகிரங்க ஆபத்துக்களில் நின்றும் குத்புமார்களைக் கொண்டே ஆண்டவன் அகிலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான்”* என்று *தப்ஸீர் ரூஹுல்பயான் 9-வது பாகம், 102-வது* பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விபரமாகத் தெரிய முஜ்த்தஹிது, ஹாபிளு அஹா தீதெ நபவிய்யா, *இமாம் ஷைகு ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய ரிஸாலா-அல்-கபருத்தால்லு அலாவுஜூதின் னுகபா-வல்-அக்த்தாபி-வல்-அவ்த்தாதி-வல்-அப்தால்* என்ற நூலையும் *அல்லாமா பகீஹ் இபுனு ஆபிதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய மஜ்முஅதுர் ரஸாயில்* நூலையும் நோட்டமிடுக.
அவுலியாக்களுள் இரு வகுப்பாருண்டு, ஒரு வகுப்பார் ஆண்டவனுடைய பாதையில் கஷ்டப்பட்டுத் தெண்டித்து அவனளவில் தன்னையழித்து பனாவாகியவர்கள், இவர்களுக்கு *கஸ்பீ* என்று சொல்லப்படும். மற்ற வகுப்பார் *ஆலம் அர்வாஹ் எனும் ஆன்ம லோகத்திலேயே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு 'அத்தாயீ'* என்று கூறப்படும். *குத்பு கௌதுகள் அத்தாயீ* வகுப்பைச் சேர்ந்தவர்களே.
(ஜவாஹிருஸ்ஸுலுக்கு 114-வது பக்கம் பார்க்க)
*இறைவன் குர்ஆன் ஷரீபில், “நிச்சயமாக அல்லாஹ் உடைய அவுலியாக்களுக்கு பயமென்பதுமில்லை கவலையென்பதுமில்லை”* என்பதாய் (10:62) அருளியுள்ளான்.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
நூல் : *ஹிதாயத்துல் அனாம் - இலா ஜியாரத்தில் அவ்லியா இல் கிராம்*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments