மிஃராஜ் பற்றி சிறு துளிகள் தொடர் 5
மிஃராஜ் நிகழ்ந்தது எப்பொழுது ?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரஜப் மாதம் இருபத்து ஏழாம் நாள், திங்கள் கிழமை இரவன்று அபூதாலிபின் மகளாரான உம்முஹானி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களது இல்லத்தில் தூங்கிிக் கொண்டிிிருந்தார்கள். உம்முஹானி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் இயற்பெயர் "பாக்தா" என்பதாகும். இவர்கள் மக்கா வெற்றி கொண்ட நாளன்று இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்களது கணவர் ஜுபைர் நஜ்ரானுக்குத் தப்பிச் சென்று, அங்கேயே காஃபிராக இருந்த நிலையிலேயே இறந்து போனார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அக்காலத்தில் இஷாவில் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு தூங்கினார்கள்.
அன்னை உம்முஹானி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களது வீட்டின் முகட்டைப் பிளந்துக் கொண்டு ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்), ஹழ்ரத் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம்), ஹழ்ரத் இஸ்ராஃபீல் (அலைஹிஸ்ஸலாம்) ஆகிய முப்பெரும் வானவர்களும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வருகை புரிந்தனர். இவர்கள் அனைவருடனும் எழுபதாயிரம் வானவர்களும் வந்திருந்தனர். ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களது இறக்கையால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எழுப்பினர்.
" என் சகோதரரே! ஜிப்ரீலே! என்ன விஷயம்? " என வினவினார்கள். அதற்கவர், "முஹம்மதே! எனது இரப்பான அல்லாஹ் தஆலா தங்களிடம் என்னையனுப்பி, தங்களுக்கு முன்னரும் பின்னரும் எவரும் செய்திராத அவ்வளவு கண்ணியத்துடன் அவனிடம் தங்களை இவ்விரவில் அழைத்து வருமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான். தங்களது இரப்புடன் உரையாடவும் அவனைக் காணவும் தாங்கள் விரும்புவீர்கள். தங்கள் அதிபதியின் விந்தைகளையும் சிறப்புகளையும் தத்துவங்களையும் தாங்கள் காண்பீர்கள்."
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :- அப்பொழுது நான் உழுச்செய்து இரண்டு இரக்அத்துகளை தொழுதேன்.
பின்னர் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது மார்பை சைகை மூலம் பிளந்தார்கள். அதுபிளந்துவிட்டது. பிறகு ஜம்-ஜம் நீரைக் கொண்டு வந்து, நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது இதயத்தை வெளிப்படுத்தி மூன்று முறை கழுவி அதிலிருந்த நோயினை அகற்றினார்கள்.
பின்னர் ஈமான், ஹிக்மத் என்னும் விவேகம் ஆகியவை நிரம்பிய தங்கத்தட்டை கொண்டுவந்து அவ்விதயத்தில் அவற்றை வைத்தார்கள். ஜம்-ஜம் நீரால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது இதயத்தைக் கழுவியதிலிருந்து அந்த நீருக்கு மற்ற நீர்களைவிடவும் அதிகமாக இருந்து வருகின்ற சிறப்பு வெளியாகின்றது. பின்னர் இதயம் அது இருந்த இடத்தில் திரும்பவும் வைக்கப்பட்டு தைக்கப்பட்டது. வெளியில் பார்ப்பதற்குத் தையல் அடையாளம் தெரிந்துக் கொண்டிருந்தது. உண்மையில் இது தையல் அல்ல. ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது கைப்பட்ட அடையாளங்களாகும்.
No comments