ஆன்மீக ஞான குரு
தீட்சையின் (பைஅத்தின்) மகத்துவம் குறித்து இமாமுல் அஃழம் அபூஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்
நமது இமாமுனா இமாமுல் அஃழம் அபூஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தாங்களுக்கு வயது என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள், "இரண்டு ஆண்டுகள் இல்லாவிட்டால் இந்த நுஃமான் நாசமாகி இருப்பார்" என்று பதில் கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றவர்கள் ஆச்ச்சரியப்பட்டவர்களாக இமாம் அவர்களிடம் திரும்பவும் கேட்டார்கள், "இமாம் அவர்களே! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள் வயது இரண்டு என்கிறீர்களே. அதற்கான விளக்கம் யாது?" என்றார்கள். அப்போது இமாமுல் அஃழம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜாஃபர் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்தில் ஈராண்டுகள் தங்கியிருந்து அகமிய ஞானங்களைப் படித்தேன். அப்படி அந்த ஈராண்டுகள் எமக்கு அமையாவிட்டால் என் வாழ்வில் இத்தனை முன்னேற்றமும் மகத்துவமும் அமைந்திருக்காது. எனவே அந்த ஈரான்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு வருடத்தைத்தான் என் வயதாகவும் நினைக்கிறேன்" என்று கூறினார்கள்.
மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தோழமை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது" என்றும் "ஒரு மனிதர் அவனுடைய நண்பருடைய குணத்தின் மீது இருக்கிறான். ஆகவே நல்ல நண்பனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" என்றும் கூறியிருக்கிறார்கள். (மிஷ்காத் 427, பாபுல் ஹுப்பி பில்லாஹ்)
நல்லோர்களுடன் தோழமை கொள்வது நல்லோராக ஆக்கி விடும். பொல்லாதவனுடன் பழக்கம் வைத்துக் கொள்வது நம்மையும் பொல்லாதவனாக ஆக்கிவிடும் என்று பாரசீக மெஞ்ஞானி ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது மஸ்னவி ஷரீபிலே கூறுகிறார்கள்.
எனவே தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறைவா! உன் நேசத்தையும், உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன்னிடமே வேண்டுகிறேன்" என்று பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள் (மிஷ்காத் 219 பாபு ஜாமிஇத்துஆஇ) . மேலும், "இறைவா! என்னை நல்லோர்களுடன் சேர்த்து வைப்பாயாக" என்று யூஸூப் நபி அலைஹிஸ் ஸலாம் பிரார்த்தனை புரிந்ததாகவும் (அல்குர்ஆன் ஸூரத் யூஸூப்:101) "இறைவா! என்னை உன் திருவருளால் உனது நல்லடியார்களில் நுழைத்து விடுவாயாக" என்று ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள் என்றும் (அல்குர்ஆன் ஸூரத் நம்லு:19) "இறைவா! என்னை ஸாலிஹாணவர்களுடன் சேர்த்தருள்வாயாக" என்று இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிரார்த்தனை செய்ததாகவும் (அல்குர்ஆன் ஸூரத் ஷுஅறா:83) குர்ஆன் ஷரீப் கூறுகிறது. இவ்வுலகில் உதித்த மனிதர்கள் அனைவரிலும் மிக உயர்ந்தவர்களான நபிமார்களே நல்லோர்களின் நட்பும் நெருக்கமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை புரிந்துள்ளார்கள் என்றால் சாதாரண மனிதர்களாகிய நம்மவர்களுக்கு நல்லமனிதர்களின் நெருக்கமும் நட்பும் சகவாஸமும் எவ்வளவு முக்கியமானது என்பதை சற்று சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப் பட்டவர்களாக இருக்கிறோம்.
No comments