இறைவனோடு இருக்க நினைப்பவர் மெய்ஞானி ஒருவரோடு அமர்வாராக என்பதன் தாற்பரியம்
🕋 *“இறைவனோடு இருக்க நினைப்பவர் மெய்ஞானி ஒருவரோடு அமர்வாராக!”*🕋 என்பதன் தாத்பரியம்
(ஹஜ்ரத் உமர் அருளிய) இந்த இரண்டொரு கிண்ணம் ஆத்ம விளக்க அமுதால் அந்தத் தூதுவர் தம்மை மறந்தார்; தாம் தூதுவராக வந்தவர் என்பதையும், ஏதோ செய்தி சொல்ல வந்தவர் என்பதையும் அவர் மறந்துவிட்டார். அவர் மஸ்தடைந்தவரானார். அரச தூதராக அங்கே வந்தடைந்த அவர் இப்போது அரசராகவே ஆகிவிட்டார்!
ஆற்று வெள்ளம் கடலில் கலந்ததும் கடலாகவே ஆகிவிட்டது;
வித்து வயலைச் சென்றடைந்ததும் தானியக் கிடங்காக ஆகிவிட்டது.
ரொட்டி மனித உடலில் சென்றடைந்ததும், அசேதனப்பொருளான அது உயிருள்ளதாகவும், அறிவுடையதாகவும் ஆகிவிட்டது.
மெழுகையும் விறகையும் நெருப்பிலிட்டதும், அவற்றின் இருண்டநிலை மாறி அவை ஒளி வீசும் பொருள்களாகிவிட்டன.
கல்லாக இருந்த சுருமாக் கண்ணில் போடப்பட்டதும் கண் பார்வையாகவும், கண்ணைக் கண்காணிப்பதாகவும் ஆகிவிட்டது.
*தன்னைவிட்டும் விடுதலையாகி ஜீவனுள்ள ஒருவரின் (சம்பூரண குருநாதரின்) ஜீவிதத்தோடு ஐக்கியமாகுபவனே பேரின்பமடைபவனாவான்.*
அந்தோ! உயிரற்றவர்களோடு (போலி ஞானாசிரியர்களோடு) உறவாடும் உயிருடையான் நஷ்டவாளிதான். அவன் மரணித்து விட்டவன்தான்; உயிர் அவனைவிட்டு அகன்றுவிட்டது.
சத்திய வேதமான திரு குர்ஆனின் பக்கல் (செயல்படத்) திரும்புவீராயின் நபிமார்களின் புனித ஆத்மாக்களோடு கலந்துறவாடும் நற்பேற்றைப் பெற்றுக்கொள்வீர்.
திரு குர்ஆனின் போதனைப்படி நடவாமல் வெறுமனே அதைப் படித்துக்கொண்டிருப்பதால் யாது பயன்? *நீர் நபிமார்களையும் ஞான நாதர்களையும் பார்த்தும், அவர்கள் காட்டிய வழிமுறையைப் பின்பற்றாவிட்டால் யாதுபயன்? (ஒரு பயனுமில்லை)* அப்படியின்றி அதை (திரு குர்ஆனை) ஏற்று அதன்படி ஒழுகிவரும் நிலையில், அதில் கூறப்பட்டுள்ள (நபிமார்களின்) வரலாறுகளை நீர் படித்தால் உம் ஆத்மப் பறவையும் (தான் அடைபட்டுள்ள இம்மை என்ற சிறையைவிட்டுத் தப்ப வேண்டுமே என்று) சிறகடித்துக்கொள்ளும். கூண்டினுள் கைதியாக அடைபட்டுக் கிடக்கும் பறவை தப்ப முயலவில்லையானால் அதற்குக் காரணம் அதன் அறியாமைதான்.
*இம்மையின் பந்தபாசங்கள் என்ற கூண்டைவிட்டு, விடுதலையான பறவைகள்தாம் நபிமார்களும், உண்மையான மெய்ஞானியருமாவர்.*
மேலேயிருந்து (அவர்களுடைய புனித ஆவிகள் இருக்குமிடத்திலிருந்து) மறுமையை விவரித்து அவர்கள் இவ்விதம் குரல் எழுப்புகின்றனர்: *“இதோ இதுதான் நீங்கள் தப்பிக்கும் மார்க்கம்!* இதன் மூலம்தான் நாம் அந்தக் கூண்டைவிட்டுத் தப்பினோம். அந்தக் கூண்டைவிட்டுத் தப்ப இதைவிட்டால் வேறு வழியே இல்லை.
எனவே, நீங்களும் இம்மையின் பேராசைகளாம் சிறையைவிட்டு வெளியாகப் பணிவுடன் அழுது இறைவனிடம் இறைஞ்சுங்கள்.
இம்மையின் பந்தபாசங்கள் (உங்கள் கால்களைப் பிணைக்கும்) மாபெரும் விலங்காகும். மெய்ஞானப்பாதையில் (தரீக்காவில்) இது இரும்பு விலங்கேயன்றி வேறில்லை.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
நூல் : *மஸ்னவி ஷரீஃப்*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments