முஹர்ரம் மாதம்
🕋 *முஹர்ரம் மாதம்*🕋
இம்மாதமாகிறது இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாகும். இதன் துவக்கமே தியாகத்தில் ஆரம்பமாகின்றது. ஆம்; மக்களாட்சியின் மாண்பினை அதாவது ஜனநாயகத்தின் சிறப்பைக் காத்திட, மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது திருப்பேரர் ஹலரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கர்பலா, களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்தது முஹர்ரம் பத்தாம் நாள் ஆகும்.
இம்மாதத்தின் சிறப்புகள் குறித்தும் இம்மாதத்தில் நிகழ்ந்துள்ளவைகள் குறித்தும் பின்வருமாறு.
வல்லோன் அல்லாஹ் இம்மாதத்தை சிறப்பு மிகு மாதம் எனக் கூறியுள்ளதற்கேற்ப, பண்டைய அரபுகளும் இதனைச் சிறப்புமிக்க மாதமாகவே கருதி, போரிடுவதைத் தவிர்த்து வந்தனர்.
*عن ابى هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلوة بعد الفريضة صلوة الليل (رواه مسلم)*
ஹல்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள். ரமலானின் நோன்பிற்கு பிறகு சிறப்பான நோன்பானது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரமின் (ஆஷுரா நாளின்) நோன்பாகும். மேலும், ஃபர்ளு தொழுகைக்குப்பின் சிறப்பான தொழுகை இரவின் (தஹஜ்ஜுத்) தொழுகையாகும்" என நவின்றனர்.
ஐவேளைத் தொழுகைகளுக்கு அடுத்து இரவு தொழுகையான "தஹஜ்ஜுது" தொழுகை, எவ்வளவு சிறப்புமிக்கத் தொழுகையாகத் திகழ்கிறதோ அவ்வாறே புனிதமிகு ரமளான் நோன்பிற்குப் பின் நோற்கப்படும் நோன்புகளில் ஆஷுரா பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பே சிறப்பிற்குரியது" என நபிமொழியின் மூலம் உணர்த்தப் பட்டுள்ளது.
புனித ரமளான் மாதத்தின் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னரே இந்நாளில் நோன்பு நோற்பது கடமையாக இருந்து வந்துள்ளது. யூதர்கள் இதனை கடைப்பிடித்து வருகின்றனர். அது பற்றிய ஹதீஸ்கள் காண்போம்.
*عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشورى فقال لهم رسول الله صلى الله عليه وسلم ماهذا اليوم الذى تصومونه فقالوا هذا يوم عظيم انجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن تصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن احق واولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وامر بصيامه. (متفق عليه)*
ஹல்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபொழுது, ஆஷுரா, பத்தாம் நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களை நோக்கி, "நீங்கள் நோன்பு நோற்றுள்ள இந்நாள் எத்தகையது?" எனக் கேட்டனர். அதற்கு யூதர்கள்,
"இது கண்ணியமிக்க சிறப்பான நாளாகும். அல்லாஹ் இன்றைய நாளில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களது மக்களையும் ஈடேற்றம் பெறச் செய்தான். ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் (கடலில்) மூழ்கடித்தான், எனவே இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) நோன்பு நோற்றனர். எனவே நாங்களும் (அவர்களைப் பின்பற்றி) நோன்பு நோற்கின்றோம்" எனக்
கூறினர்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களை நோக்கி "நாங்கள் உங்களை விட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு முதன்மையான உரிமை பெற்றவர்கள் என்று கூறி, அவர்களும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்றிடுமாறு ஏவினார்கள்".
(மிஷ்காத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்று, மேலும் அதில் நோன்பு நோற்குமாறு பிறரையும் ஏவினார்கள்.
(புகாரி, முஸ்லிம்.)
*وقال عليه الصلوة و السلام صوموا عاشوراء يصام قبل رمضان فلما نزل رمضان كان من شاء صام و من شاء افطر ومن الاول اباحة وبركة التوسعة فيه على عياله*
மேலும் கூறினார்கள்:-
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் ஆஷுரா நாளின் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது. எப்பொழுது ரமளானின் நோன்பு கடமையாக்கப்பட்டதோ அதன் பிறகு ஆஷுரா நோன்பை விரும்பியவர்கள் வைக்கவும் என்று கூறினார்கள்.
*யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்*
*وقال عليه الصلوة و السلام صوموا عاشوراء وخالفوا فيه اليهود و صوموا قبله يوما و بعده يوما*
மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஆஷுரா நோன்பை நோற்றிடுங்கள்; அதில் யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்; அதற்கு முதல் நாளும், பிந்தைய நாளும் நோன்பு நோற்பது அவசியமாகும்"
*(ஜம்உல் ஃபவாயிது, அஹ்மத், வல்பஜ்ஜார்.)*
யூதர்கள் ஆஷுராவின் ஒரு நோன்பை மட்டும் நோற்பர்; நாம் அவ்வாறு நோற்காமல் (முஹர்ரம் 9, 10) இரண்டு நோன்புகள் நோற்றிட வேண்டுமென்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
*وقال عليه الصلوة و السلام صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله*
மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்
ஆஷுரா உடைய ஒரு நாளைய நோன்பானது அதற்கு முன்னர் நிகழ்ந்து விட்ட ஓராண்டிற் குறிய சிறிய பாவங்களைப் போக்கி விடும் என நான் ஆதரவு வைக்கின்றேன்,
(முஸ்லிம்.)
*குடும்பத்தாருக்குச் செலவிடுவீர்*
*وقال عليه الصولة و السلام من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه بسائر سنته*
மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,"
ஆஷுரா நாளன்று எவர் தமது குடும்பத்தாருக்குச் செலவிடுவதில் தாராளமாக நடந்து கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு அவ்வாண்டு முழுவதிலும் விசாலமாக்கித் தருகின்றான்",
(ஜம்வுல்பவாயிது.)
இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக்கண்டோம்" என்று சுஃப்யான் இப்னு உயைனா
(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்,
*இந்நாளில் நிகழ்ந்தவை*
நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றது ஆஷுரா நாளில்தான். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு 'கலீல்' என்னும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில்தான்.
ஹலரத் அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் ஆஷுரா நாளில்தான். மேலும், ஹலரத் மூஸா (அலைஹிஸ்ஸலாம்), ஹலரத் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரது இறைஞ்சுதல் ஏற்கப்பட்டதும் ஆஷூரா நாளில்தான்.
மேலும் மர்யமின் மைந்தர் ஹலரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டதும் ஆஷுரா நாளில்தான், ஹலரத் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் படைக்கப்பட்டதும் ஆஷுரா நாளிலேயாகும்.
ஹலரத் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்பலிலிருந்து கரையிறங்கியதும் இந்நாளிலேயாகும்.
ஹலரத் யூனூஸ்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீன்வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளிலேயேயாகும்.
ஹலரத் தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்க்கப்பட்டதும் இந்நாளிலேயேயாகும்.
ஹலரத் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அரசாங்கம் மீண்டதும் இந்நாளிலேயாகும்.
ஹலரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கர்பலா களத்தில் தம் உயிரைத் தியாகம் செய்த நாளும் இந்நாளிலேயாகும்.
இந்நாளில் தான் உலகம் முடிவுறும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments