Header Ads

  • Breaking News

    தவ்ஹீது பற்றிய பாடம்

    🌻 *தவ்ஹீது பற்றிய பாடம்* 🌻


            தீனுடைய கடமைகளில் மூன்றாவது தவ்ஹீதாகும். அதாவது அல்லாஹு தஆலா ஒருவனென்பதைத் தன் இதயத்தில் தரிபடுத்துதல். *"தவ்ஹீதென்பது என்னுடையது, உன்னுடையது என்ற தன்மைகளை விடுவதுதான்”* என்று சில ஆரிஃபீன்கள் கூறியுள்ளார்கள். இன்னும் ஒருவர் *"தவ்ஹீதாகிறது அல்லாஹ் ஒருவனென்பதைத் தன் சிந்தையில் அறிந்து, அவனல்லாததை சிந்தையிலிருந்து நீக்கி விடுவதாகும்"* என்று கூறுகிறார்.


    *وماخلقت الجن والانس الا ليعبدون. (51:56)*


          *"மனிதர்களையும், ஜின்களையும் அவர்கள் என்னை (யறிந்து ஓர்மைப்படுத்தி) வணங்குவதற்கேயல்லாமல் நான் படைக்கவில்லை"* என்று ஓர் ஆயத்திலும்,


    *افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لاترجعون. (23:115)*


            *"நாம் உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும், நீங்கள் நம் பக்கம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா?"* என்று மற்றோர்

    ஆயத்திலும் அல்லாஹ் கூறுகிறான்.


    *தவ்ஹீதில் மூன்று வகை உண்டு*


    *முதலாவது توحيد الذات*


           அவனுடைய உள்ளமையில் அவனை ஓர்மைப்படுத்துதல். அதாவது அல்லாஹு தஆலா தன் உள்ளமையினால் ஒரு பொருளில் இறங்கியவன், அல்லது அதை விட்டு நீங்கியவன், என்ற சந்தேகம், ஊசாட்டம் அனைத்தையும் நீக்கி அவன் தாத்தினால் ஒருவன் என்பதைத் தரிபடுத்துவது.


    *இரண்டாவது توحيد الصفات*


             அவனுடைய வர்ணிப்புகளில் அவனை ஓர்மைப்படுத்துதல். அதாவது: அவனுடைய வர்ணிப்புகள் எதுவும் வேறு எவருக்கும் இருக்கிறது என்று எண்ணாமல் அவை அனைத்தையும் அவனுக்கே தரிபடுத்துவது. வெளித்தோற்றத்தில் சில பண்புகள் மனிதர்களிடத்தில் இருக்கின்றன வென்றாலும் அதன் தன்மையில் அவை அவனுக்கே முழுமையாக இருக்கின்றன; வேறு எவருக்கும் அவ்வாறு இருக்க முடியாது. உதாரணமாக; நாமும் அறிவுள்ளவர் என்று கூறுகிறோம்; அல்லாஹ்வும் தன்னை அறிவுள்ளவன் என்று கூறுகிறான். இவ்விரண்டும் எப்பொழுதும் எவ்வகையிலும் சமமாக முடியாது. நாமும் நாடுகிறோம்; அவனும் நாடுகிறான். இரண்டு நாட்டங்களும் சமமாகாது. நிழலாகிறது நிழல் உடையவனுக்குள் பிணைந்திருப்பதுபோல்.


    *وماتشاءون الا ان يشآء الله*


            *"அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நாடுவதில்லை"* என்று அல்லாஹு தஆலா கூறுகிறான். நம்முடைய தன்மைகள் அனைத்தும் மட்டுத்திட்டம் உடையவையாகவும், மற்றொன்றைத் தழுவி நிற்பவையாகவும் இருக்கும். ஆகையால், பொய்யான தன்மைகளைப் பொதிந்துகொள்ளாத மெய்யான தன்மைகள் அவனுக்கு உண்டென ஓர்மைப்படுத்துதலாகும்.


    *மூன்றாவது توحيد الافعال*


                  அவனுடைய செயல்களில் அவனை ஓர்மைப்படுத்துதல். அதாவது அல்லாஹ்வுடைய செயல்கள் அவனுடைய சிஃபத்துகளைத் தழுவியவையாகவும், சிஃபத்துகள் அவனுடைய தாத்தைத் தழுவியவையாகவும் இருப்பதால், அவனுடைய செயல்களுக்கு எதிராகச் செய்பவர் எவரும் கிடையாது என்று அவனுடைய செயல்களை ஓர்மைப்படுத்துவதாகும். நம்முடைய செயலும், செயலைச் செய்பவனும், செய்யப்படுகிற விஷயமும் நிலையற்றவையாகும் ; ஒரு செயலில் பலரும் கூட்டாவதற் குரியவையாகும்.


    🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

    நூல் : *மார்க்க சட்டக் கருவூலம் "மஙானீ"*

    நூலாசிரியர் : *அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்*

    பக்கம் : *58,59*

    பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

    🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad