மஃரிஃபா எனும் ஞானம்
🌸 *இறைவன் பக்கம் நெருங்கிச் செல்லுதல்* 🌸
*மஃரிஃபா என்னும் ஞானத்தில்* மிக நெருக்கமானது *தன்னை அறிவதாயிருக்கும்.* தான் என்பது தன்னுடைய சிஃபத்துகளாயிருக்கும். இதற்கு ஆதாரம் பின்வருமாறு: *அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத் தன் வடிவத்தில் படைத்தான்.* அல்லது *ரஹ்மானுடைய வடிவத்தில் படைத்தான்* என்று ஹதீஸில் கூறப்பட்டு உள்ளது. தன்னுடைய வடிவம் என்றால், தன் சிஃபத்தில் படைத்தான் என்பது பொருளாகும். எனவே, மனிதன் தன்னுடைய சிஃபத்துகளை அறியும்போது, தன்னுடைய ரப்பை அறிந்தவனாக ஆகிவிடுவான். அதாவது: *தன்னுடைய அரூபியான, இன்னும் ரூபமுள்ள சிஃபத்துகளை இல்லாமலாக்கி, தன் ரப்புடைய சிஃபத்துகளைத் தரிபடுத்தினால், அங்கு தன் சிஃபத்துக்குரிய ரப்பை அறிந்து கொள்வான் என்பதாகும்.* இதற்கு
*قرب النوافل*
*நஃபிலான நெருக்கம் - சுன்னத்தா வணக்கம்* என்றும் கூறப்படும்.
இது பற்றி ஹதீஸ் குத்ஸியில் *என்னுடைய அடியான் என்னிடத்தில் நஃபிலான வணக்கங்களைக் கொண்டு நான் அவனை நேசிக்கும்வரை நெருங்கிக்கொண்டேயிருப்பான். நான் அவனை நேசித்தால் அவன் பார்க்கும் பார்வையாக, அவன் கேட்கும் செவியாக, அவன் பிடிக்கும் கையாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுவேன்"* என்று அருளப்பட்டுள்ளது.
பிறகு *தன் உள்ளமையை இல்லாமலாக்கி அல்லாஹுதஆலாவுடைய உள்ளமையைக் காணுவானாகில் அதற்கு قرب الفرائض ஃபர்ளான நெருக்கம்* என்று கூறப்
படும்.
இவ்வாறு சிஃபத்துகளை இல்லாமலாக்குவதற்கு முன், நற்செயல்களனைத்தையும் நாயனளலில் சேர்த்து அதில் தன்னைக் காணாமலும், தீய செயல்கள் அனைத்தையும் தன்னளவில் சேர்த்து அதில் ரப்பைக் காணாமலும் இருக்கவேண்டும். "எந்த ஒரு நன்மை உனக்கு ஏற்பட்டாலும் அது அல்லாஹ்வில் நின்றுமுள்ளதாகும்; எந்த ஒரு தீமை ஏற்பட்டாலும் அது உன் புறத்தில் நின்று முள்ளதாகும்" என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் (4:79) மற்றோர் இடத்தில், *"அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளவை என்று கூறுவீராக! "(4:78)* என்று அருளியுள்ளான். மற்றொரு வசனத்தில், *"நீர் எறிந்த நேரத்தில் நீர் எறியவில்லை; எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்" (8:17)* என்றும் கூறியுள்ளான். இந்த மூன்று ஆயத்துகளையும் நன்கு
சிந்தித்தால் மேற் கூறிய கருத்து விளங்கும்.
நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கிப்தீ மனிதன் ஒருவனை அடித்தவுடன் அவன் இறந்து விட்டான். அப்பொழுது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தான் செய்த அச்செயலை, *"இது ஷைத்தானுடைய செயலில் உள்ளது" (28:15)*
*هذا من عمل الشيطان*
என்று கூறினார்கள்.
எனவே *(ஃபனாவென்னும்) தான் என்னும் எண்ணத்தை அழிப்பது, செயலிலும், சிஃபத்திலும், உஜூதிலும் உண்டாக வேண்டும். இவ்விதம் ஃபனாவானவர்களின் வாயிலும், கையிலும், சரீரத்திலும் அல்லாஹ்வின் "கட்டளையல்லாது வேறொன்றும் நடைபெறாது. தங்களுக்கென எச்செயலும் இல்லாததாகக் கருதுவதால் தங்களை மௌத்தானவர்களாகவே காண்பார்கள்.*
ஸய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய விஷயத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
*من اراد ان ينظر الى ميت يمشي على وجه الارض فلينظر الى ابي بكر*
*"பூமியின் மீது நடமாடும் மய்யித்தைப் பார்க்கவேண்டுமென விரும்புகிறவர் அபூபக்கரைப்பார்த்துக்கொள்ளவும்."* தங்களுக்கென எந்த விருப்பமும் இல்லாது. எல்லாவற்றையும் அல்லாஹ்வின் பக்கம் ஒப்படைத்து வாழ்வதைக் குறித்தே இவ்வாறு
கூறினார்கள்.
இத்தகையோரைக் கொண்டு *அல்லாஹுதஆலா இறந்தவரை உயிர்ப்பிப்பதும், அவர்களைத் தண்ணீரின் மீது நடக்கச்செய்வதும், ஆகாயத்தில் பறக்கச்செய்வதும், நெருப்பு சுடாதிருக்கச் செய்வதும், புதுமையான விஷயங்களல்ல. இவர்கள் தங்களுக்கென எவ்வித நினைவும் இல்லாத நிலையில் செயலாற்றினாலும் வெளிப்படையான ஃபர்லு, வாஜிபு, சுன்னத்து ஆகிய எதிலும் எவ்விதப் பிசகுதலும் ஏற்படாது.* ஏனெனில் அல்லாஹுதஆலா தான் விதித்த கட்டளைகளை தானே அவர்களைக் கொண்டு நடத்தாட்டுகிறான் என்பதினாலாகும்.
*ஸய்யிதுனா அலீ (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்களுடைய காலில் அம்பு தைத்தபோது அதனைப்பிடுங்கி எடுப்பதில் வேதனை ஏற்பட்டதால், அன்னார் தொழும்போது அதனை எடுத்து விடுமாறு கூறினார்கள். அவ்வாறே அவர்கள் தொழும்போது அதனை எடுத்தனர். தொழுது முடித்த பின், *"அம்பை எடுத்துவிட்டீர்களா?"* என்று அவர்கள் கேட்ட நிகழ்ச்சியும்,
*இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள் தொழுத இடம் மட்டும் நெருப்புப் பிடிக்காமல் இருந்து, தொழுது முடித்த பின்னரே அவர்கள் தெரிந்து கொண்ட நிகழ்ச்சியும்,
*இமாம் அபூஹனீஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி)* அவர்கள் கூஃபா நகரத்தின் பாழடைந்த பள்ளி ஒன்றில் தொழுது கொண்டிருந்தபோது, மேற்கூரையிலிருந்து ஒரு மலைப்பாம்பு அவர்களின் மேல் விழுந்து கழுத்தில் சுற்றிக் கொண்டதையும் அவர்கள் அறியாமல், தொழுது முடித்த பிறகே அதனைத் தெரிந்துக் கொண்ட நிகழ்ச்சியும்,
*ஆரிஃபீன்களில்* பெரும்பாலானவர்களுக்கு நடைபெற்ற இவை போன்ற நிகழ்ச்சிகளும், *அவர்கள் ஹக்கைத் தவிர வேறு எதனையும், காணவில்லையென்பதினாலும், அல்லாஹுதஆலா, அவர்களைக் கொண்டு தானே காரியங்களை நடத்தி வைக்கிறான் என்பதினாலும் உண்டானவையாகும்.*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
நூல் : *மார்க்க சட்டக் கருவூலம் "மஙானீ"*
நூலாசிரியர் : *அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்*
பக்கம் : *70,71,72*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
☀☀☀☀☀☀☀☀☀☀
No comments