Header Ads

  • Breaking News

    குர்பானியின் தன்மை

    *குர்பானி*


    இறைவன்

    நான்

    இந்த இரண்டுக்கும்

    போட்டி ஏற்படும்போது

    நான்-எனது என்ற தன்மையை

    இறைவனுக்கு அர்ப்பணிப்பதே

    குர்பானி!


    இந்த பூமியில்

    இதுவரை பலியிடப்பட்டவை

    எத்தனை கோடி ஆடுகள்

    மாடுகள் - ஒட்டகங்கள்!

    ஆனால்

    குர்பானியின் தத்துவம்

    உணரப்பட்டதா?


    உணர்ந்திருந்தால்

    உயிரினங்களைப் பலியிடும்போதே

    நாம் - நமக்குள் இருக்கும்

    சைத்தான் மீது கல்லெறிந்து

    ஆசைகளை

    தீயபழக்கங்களை

    குர்பானி கொடுத்திருப்போம்!


    ஆனால்

    நாம் தினமும் கொடுக்கும்

    குர்பானிகளோ விசித்திரமானவை!


    உறக்கத்திற்காக

    *சுபுஹு தொழுகையையும்

    வேலை வெட்டிகளுக்காக

    மற்ற தொழுகைகளையும்

    மிச்சப் படுத்துவதற்காக 

    ஜகாத் - ஹஜ்ஜையும்

    சம்பாதிப்பதற்காக

    நேர்மை - நாணயத்தையும்,


    பெரிய மனிதனாவதற்காக

    நீதியையும்

    சுய நலத்திற்காக

    வாக்குறுதியையும்

    காமத்திற்காக கற்பையும்

    *துனியாவுக்காக

    *ஆகிறத்தையும்

    குர்பானி கொடுத்தோம்!


    பெயர் மட்டும்

    இபுறாஹீம் - இஸ்மாயீல்

    செயல்களில்

    *நம்ரூதின் சாயல்!


    நல்ல பண்புகளைப்

    பொசுக்கி விடுவதற்காக

    நமக்குள்ளேயே

    நம்ரூதின் நெருப்புக் குண்டம்!


    *சுபுஹு : வைகறைத்தொழுகை

    *துனியா : இம்மை

    *ஆகிறத் : மறுமை

    *நம்ரூத் : நானே இறைவன் என்று பிரகடனப்படுத்திய அரசன்


    ஓ... முஸ்லிம்களே!

    குர்பானி

    ஆடு மாடுகளை அறுக்கும் சடங்கல்ல!

    ஆசைகளை அறுப்பதற்கான

    ஆன்ம ஒத்திகை!


    இரத்தத்தை பூமியின் மேல் ஓட்டும்

    திருவிழா அல்ல

    சித்தத்தை சுத்தப்படுத்தும்

    தெய்வீகப் பயிற்சி!


    உங்கள் குர்பானி

    உயிர்பெற வேண்டுமானால்

    *சபா மர்வாவுக்கிடையே

    தண்ணீர் தேடியலைந்த

    தாய் ஹாஜராவின் தவிப்பு

    மகனையே அறுக்கத்துணிந்த

    இபுறாஹீம் நபியின் உணர்வு

    தன்னை இழக்கச் சம்மதித்த

    இஸ்மாயீல் நபியின் தியாகம்

    இந்த மூன்றும்

    வாழ்வில் ஒருமுறையாவது

    நம் நெஞ்சில்

    வலம் வரவேண்டும்!


    அப்போது தான்

    நம்குர்பானி

    *கபூலாகும்!


    *சபா மர்வா : மக்காநகரில் உள்ள ஓரிடம்

    *கபூல் : இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவது.


    🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹


    கவிதை : *கவிஞர் கலீஃபா ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்* (மறைஞானப்பேழை ஆன்மிக மாத இதழின் ஆசிரியர்)


    பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*


    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad